வங்கதேசத்தில் பரிதாபம் அடுக்குமாடி குடியிருப்பில் தீ 81 பேர் உடல் கருகி பலி

தினகரன்  தினகரன்
வங்கதேசத்தில் பரிதாபம் அடுக்குமாடி குடியிருப்பில் தீ 81 பேர் உடல் கருகி பலி

தாகா: வங்கதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 81 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றது. வங்கதேச தலைநகர் தாகாவின் பழமையான இடங்களில் ஒன்று சாக்பஜார். இந்த பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதன் கீழ்தளம் ரசாயன கிடங்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு  ரசாயன கிடங்கில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியது. இதனால் அங்கு தீ பரவியது. மளமளவென ரசாயனம் பற்றி எரிந்தன. இதனால் கொளுந்து விட்டு எரிந்த தீ அடுத்தடுத்த நான்கு கட்டிடங்களில் பரவியது. இந்த கட்டிடங்களும் ரசாயன கிடங்கு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் ேசமிப்பு கிடங்காக பயன்படுத்தப்பட்டு வந்தவை. மேலும் ஒரு கட்டிடத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. குறுகலான பாதை என்பதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்களால் உடனடியாக அங்கிருந்த தப்பிச்செல்ல முடியவில்லை. இதனால் பலர் தீயில் சிக்கினார்கள். அந்த இடமே போர்க்களம் போலானது. தகவல் அறிந்து தீயணைப்பு துறை வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. ஆனால் அவர்களாலும் உடனடியாக தீப்பற்றிய இடத்துக்கு செல்ல முடியவில்லை. இதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மற்றும் நீண்ட பைப்புகள் மூலமாக தீயை கட்டுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  சுமார் 200 வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். தீப்பற்றி எரிவது கட்டுப்படுத்தப்பட்டாலும், நீண்ட நேரம் வரையில் ரசாயன பொருட்கள் எரிந்தபடியே இருந்தன. தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து இதுவரை 81 ேபரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பெண்கள், சிறுவர்கள் என சுமார் 50 பேர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் பலர் கவலைக்கிடமாக  இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று என்று அஞ்சப்படுகின்றது.

மூலக்கதை