பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம்: இம்ரான் கான் வீராப்பு

தினமலர்  தினமலர்
பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம்: இம்ரான் கான் வீராப்பு

இஸ்லாமாபாத், 'இந்தியா எந்த நடவடிக்கை எடுத்தாலும் பதிலடி கொடுக்க தயாராகவே உள்ளோம்' என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.புல்வாமா தாக்குதலுக்குப்பின் இந்தியா--பாகிஸ்தான் உறவு சீர்கெட்டுள்ளது. 'இது புதிய இந்தியா, தாக்குதலுக்கு துணை போனவர்கள் அதற்குரிய பலனை அனுபவித்தே தீர வேண்டும்', என பிரதமர் மோடி கூறியிருந்தார். அதற்கு தற்போது இம்ரான்கான் பதிலளித்துள்ளார்.இஸ்லாமாபாத்தில் நேற்று தேசிய பாதுகாப்புக்குழு கூட்டம் நடந்தது. ராணுவ தளபதி ஜாவீத் பஜ்வா, ராணுவம், உளவுப்பிரிவு, நிதித்துறை அதிகாரிகள், வெளியுறவுத்துறை அதிகாரிகள், மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர். புல்வாமா தாக்குதலையடுத்து நிலவும் பதட்டமான சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது.இம்ரான்கான் அறிக்கை புல்வாமா சம்பவத்திற்கும் (தாக்குதல் என குறிப்பிடாமல் சம்பவம் என குறிப்பிட்டுள்ளார்) பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது தனிப்பட்ட சிலரால் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இதை திசைதிருப்ப இந்தியா முயற்சிக்கிறது. அதற்கு தகுந்த பதிலடி கொடுக்க தயாராகவே உள்ளோம். தாக்குதல்கள் குறித்து முடிவெடுக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் தரப்பட்டுள்ளது.இது புதிய பாகிஸ்தான். யாருக்கும் அஞ்சும் நிலையில் தேசம் இல்லை. எங்கள் மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். இவ்வாறு அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கு இந்தியா உடனடி பதிலடி கொடுத்துள்ளது.இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: ஒவ்வொரு தாக்குதலுக்குப்பிறகும் பாகிஸ்தான் இவ்வாறு கூறுவது வழக்கம் தான். அதையே இம்ரானும் கூறியுள்ளார். புல்வாமா தாக்குதலை 'பயங்கரவாத தாக்குதல்' என ஏற்கக்கூட இயலாத நிலையில் அவர் உள்ளது வருந்தத்தக்கது. அதை 'சம்பவம்' என கூறியதன்மூலம் அவரது நிலையை உலகம் புரிந்து கொண்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை