மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ராய், ரூட் அதிரடியில் இங்கிலாந்து மிரட்டல் வெற்றி

தமிழ் முரசு  தமிழ் முரசு
மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ராய், ரூட் அதிரடியில் இங்கிலாந்து மிரட்டல் வெற்றி

பார்படாஸ்: ஜேசன் ராய் மற்றும் ஜோ ரூட்டின் அதிரடி சதத்தால் 361 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்தி, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி மிரட்டல் வெற்றியை பெற்றது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளில் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி, நேற்று பார்படாசில் நடந்தது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட் செய்தது. ஓபனர்களில் ஜான் கேம்பல் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

2வது விக்கெட்டுக்கு கிறிஸ் கெய்ல்-ஷாய் ஹோப் ஜோடி 131 ரன்களை குவித்தது. 64 ரன்களில் ஹோப் ஆட்டமிழந்த பின்னர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் ஹெட்மெய்ரும், நிகோலஸ் பூரானும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர்.

இருப்பினும் மறுமுனையில் அசராமல் நின்றார் கெய்ல். டேரன் பிராவோ (40 ரன்கள்) கை கொடுக்க, கெய்ல் வெற்றிகரமாக சதத்தை பூர்த்தி செய்தார்.

129 பந்துகளில் 135 ரன்களை குவித்த கெய்ல், 47வது ஓவரில் ஸ்டோக்ஸ் பந்தில் கிளீன் போல்டு ஆனார். 12 சிக்சர்களை விளாசி, ரசிகர்களை அவர் பரவசத்தில் ஆழ்த்தினார்.

மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 360 ரன்கள் என வலுவான ஸ்கோரை எடுத்தது.

இங்கிலாந்து பவுலர்கள் பென் ஸ்டோக்ஸ் மற்றும் அடில் ரஷித் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 361 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்தி, இங்கிலாந்தின் ஓபனர்கள் களமிறங்கினர். ஓபனர்கள் ஜேசன்ராய் மற்றும் பேர்ஸ்டோ முதல் 11 ஓவர்களில் 91 ரன்களை குவித்து வலுவான துவக்கத்தை அளித்தனர்.

34 ரன்களில் பேர்ஸ்டோ ஆட்டமிழந்த பின்னர் ஜேசன் ராயுடன், ஜோ ரூட் இணைந்தார். இருவரும் சேர்ந்து ருத்ரதாண்டவமே ஆடி விட்டனர்.

2வது விக்கெட்டுக்கு அடுத்த 16 ஓவர்களில் இருவரும் 114 ரன்களை குவித்தனர். 85 பந்துகளில் 123 ரன்களை (15 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) விளாசிய ஜேசன் ராய், பிஷூ வீசிய பந்தில் பிராவோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அவருக்கு பதிலாக ஆட வந்த கேப்டன் மோர்கன், 51 பந்துகளில் 65 ரன்களை குவித்து, அணியின் வெற்றிக்கு உதவினர்.

மறுமுனையில் பொறுப்பாக ஆடிய ஜோ ரூட்டும், சதத்தை பூர்த்தி செய்தார். 97 பந்துகளில் 102 ரன்களை எடுத்த அவர் , இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 360 என்று இருந்த போது ஹோல்டரின் பந்துவீச்சில் பூரானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அணியின் வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவை என்ற நிலையில் பட்லர் வந்து ஒரு பவுண்டரி அடித்தார். 48. 4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து இப்போட்டியில் எளிதாக வென்றது.

இங்கிலாந்து அணியின் ஓபனர் ஜேசன் ராய், இப்போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாளை இதே மைதானத்தில் நடைபெற உள்ளது.

.

மூலக்கதை