நாட்டின் சர்க்கரை உற்பத்தி 8 சதவீதம் அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
நாட்டின் சர்க்கரை உற்பத்தி 8 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி : நாட்டின் சர்க்கரை உற்பத்தி, நடப்பு சந்தை ஆண்டில், பிப்., 15 வரையிலான காலத்தில், 8.07 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து, இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கமான, ஐ.எஸ்.எம்.ஏ அறிவித்துள்ளதாவது: 2018- – 19 சந்தை ஆண்டில், சர்க்கரை உற்பத்தி, பிப்., 15ம் தேதி நிலவரப்படி, 8.07 சதவீதம் அதிகரித்து, 21.93 மில்லியன் டன் ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான நடப்பு சந்தை ஆண்டில், ஒட்டுமொத்த உற்பத்தியானது குறைந்து, 30.07 மில்லியன் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே, இதற்கு முந்தைய ஆண்டில், சர்க்கரை உற்பத்தி, 32.5 மில்லியன் டன் ஆக இருந்தது.

அண்மையில் சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலை கிலோவுக்கு, 2 ரூபாய் அதிகரித்து, 31 ரூபாயாக ஆனதில் சர்க்கரை ஆலைகளுக்கு வருவாய் அதிகரித்தது.இது கரும்பு விலை பாக்கியை செலுத்த, ஆலைகளுக்கு உதவிகரமாக இருந்தது.இந்த ஆண்டில் உற்பத்தி அதிகரித்ததற்கு காரணம் மஹாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கரும்பு அரவை முன்னதாகவே துவங்கிவிட்டது தான்.

நாட்டில் அதிகளவில் சர்க்கரை உற்பத்தி செய்யும் மஹாராஷ்டிராவில், 7.47 மில்லியன் டன் என்பதிலிருந்து, 8.29 மில்லியன் டன்னாக உற்பத்தி அதிகரித்துள்ளது.இருப்பினும், உத்தரபிரதேசத்தில் 6.45 மில்லியன் டன் என்பதிலிருந்து, 6.39 மில்லியன் டன் ஆக குறைந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் சர்க்கரை உற்பத்தி குறைவுக்கு காரணம், அங்கு கரும்பு விளைச்சல் சரிந்தது தான்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, 2 லட்சத்து, 90 ஆயிரம் டன் என்பதிலிருந்து, 3 லட்சத்து, 50 ஆயிரம் டன் ஆக அதிகரித்துள்ளது.உலகளவில், சர்க்கரை உற்பத்தியில் பிரேசில் நாட்டுக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. நாட்டின் ஆண்டு நுகர்வு, 26 மில்லியன் டன் ஆகும்.இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை