ரூ.400 கோடி முதலீட்டில் விமான பராமரிப்பு சேவை

தினமலர்  தினமலர்
ரூ.400 கோடி முதலீட்டில் விமான பராமரிப்பு சேவை

விமான பராமரிப்பு நிறுவனம் ஒன்று, சென்னை விமான நிலையத்தில், 400 கோடி ரூபாய் முதலீடு செய்ய, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது என, தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு சார்பில், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு, சென்னையில் கடந்த மாதம் நடந்தது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, நிறுவனங்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மாநாட்டில், 304 பெரு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின. இதன் வழியாக, 3 லட்சத்து, 431 கோடி ரூபாய் முதலீடு கிடைக்க உள்ளது. இதில், விமான பராமரிப்பு நிறுவனம் ஒன்று, பல நுாறு கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.

இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது: இரண்டாது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், விமானம் மற்றும் விமான உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.இதில், இந்திய பாதுகாப்பு துறைக்கு தேவையான பாகங்களை தயாரித்து வழங்க, பல்வேறு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ஆனால், அவற்றை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது.

பயணியர் விமான சேவையில் உள்ள, விமானங்களை பராமரிப்பதற்காக, ‘கருடா ஏரோஸ்பேஸ்’ நிறுவனம், 400 கோடி ரூபாய் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிறுவனம், சென்னை விமான நிலையத்தில் தன் பணியை துவங்க உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

– நமது நிருபர் –

மூலக்கதை