வீடு, வாகன கடனுக்கு வட்டி குறையுமா?

தினமலர்  தினமலர்
வீடு, வாகன கடனுக்கு வட்டி குறையுமா?

புதுடில்லி : வீடு, வாகன கடன்களுக்கான வட்டியை, வங்கிகள் குறைக்குமா என்பது இன்று தெரியவரும். இது குறித்து, ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ், இன்று பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, 7ம் தேதி, வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ‘ரெப்போ’ வட்டியை, 0.25 சதவீதம் குறைத்து, 6,25 சதவீதமாக நிர்ணயித்தது.ஆனால் வங்கிகள், அவற்றின் தனிநபர் கடன், வாகன கடன், வீட்டு வசதி கடன் உள்ளிட்டவற்றுக்கான வட்டியை குறைக்கவில்லை. ஓரிரு வங்கிகள் மட்டுமே, சிறிதளவு வட்டியை குறைத்துள்ளன. எஸ்.பி.ஐ., 0.05 சதவீத அளவிற்கே, வீட்டு வசதி கடனுக்கான வட்டியை குறைத்தது.

இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ், சமீபத்தில் பேசிய போது, ‘‘ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டியை குறைத்த உடன், வங்கிகள் அந்த பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டியது மிகவும் முக்கியம்.’’ என்றார்.

இது குறித்து விவாதிக்க, 21ம் தேதி, பொது துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் தலைமை செயல் அதிகாரிகள், நிர்வாக இயக்குனர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார். அதன்படி, இன்று நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில், சக்திகாந்த தாஸ், வங்கிகளிடம் வட்டியை குறைக்குமாறு வலியுறுத்துவார் என, தெரிகிறது.

இதைத் தொடர்ந்து, வங்கிகள், அவற்றின் வீடு, வாகனம் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி குறைப்பு குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை