‘இந்தியா மீதான நம்பிக்கை சிறிதும் குறையவில்லை’

தினமலர்  தினமலர்
‘இந்தியா மீதான நம்பிக்கை சிறிதும் குறையவில்லை’

புதுடில்லி : ‘‘மின்னணு வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையை, மத்திய அரசு மாற்றிக் கொண்ட போதிலும், இந்தியா மீதான எங்கள் நம்பிக்கை சிறிதளவும் குறையவில்லை,’’ என, அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்தின் தலைவர், டக்ளஸ் மெக்மில்லன் தெரிவித்துள்ளார்.

அமேசான், வால்மார்ட் போன்ற அன்னிய மின்னணு வர்த்தக நிறுவனங்களின் முதலீடு தொடர்பான புதிய விதிமுறைகள், இம்மாதம், 1ல் அமலுக்கு வந்துள்ளன.அதன்படி, இந்நிறுவனங்கள் பங்கு முதலீடு செய்துள்ள, பிற நிறுவனங்களின் பொருட்களை விற்க முடியாது. அத்துடன், பொருட்கள் விற்பனையில், நியாயமற்ற தள்ளுபடி சலுகைகள் வழங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

அமேசான், வால்மார்ட் போன்ற, அன்னிய நிறுவனங்களின் கடும் போட்டியை, ‘ஷாப்க்ளுவ்ஸ், ஸ்நாப் டீல்’ போன்ற உள்நாட்டு வலைதள சந்தை நிறுவனங்கள் சமாளிக்கும் நோக்கில், இத்தகைய கொள்கை மாற்றங்களை, மத்திய அரசு செய்துள்ளது.இது, 2018ல், பிளிப்கார்ட் நிறுவனத்தை, 1,12 லட்சம் கோடி ரூபாய்க்கு கையகப்படுத்திய, வால்மார்ட் மற்றும் அமேசான் போன்ற அன்னிய நிறுவனங்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, டக்ளஸ் மெக்மில்லன். செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா மிகப் பெரிய சந்தை. கடந்த ஆறு மாதங்களுக்கு முன், மின்னணு வர்த்தகத் துறை எத்தகைய அளவிற்கு தொடர்ந்து வளர்ச்சி கண்டு வந்ததோ, அது, தற்போதும் தொடர்கிறது. நடுத்தர வருவாய் பிரிவினர் அதிகரித்து வருகின்றனர்.

தடுமாற்றம் இல்லை:
இத்துறையின், சில்லரை விற்பனையில் மிகப் பெரிய அளவிற்கு வர்த்தக வாய்ப்புகள் உள்ளன. அதனால், எந்த காரணத்திற்காக, இந்திய சந்தையில் கால்பதிக்க வேண்டும் என விரும்பினோமோ, அதில் இன்றளவும் எவ்வித தடுமாற்றமும் எங்களுக்கு இல்லை. அதேசமயம், மின்னணு வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டு கொள்கைகளில், தற்போது செய்துள்ள மாற்றங்கள், சில வழிகளில் எங்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளதையும் மறுப்பதற்கில்லை.

ஆனால், அது, இந்தியா மீது நாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை அசைத்துப் பார்க்கும் அளவிற்கு, பெரிதாக இல்லை.இது ஏதோ, ஒரு காலாண்டு அல்லது ஓராண்டுடன் முடிந்து போகும் நடவடிக்கை என, நாங்கள் கருதவில்லை. இத்துறையின் நீண்ட கால வளர்ச்சிக்காக, அரசுடன், பயனுள்ள, ஆக்கபூர்வ பேச்சு நடத்த வாய்ப்பு கிடைக்கும் என, எதிர்பார்த்துள்ளோம். அதேசமயம், இந்த வர்த்தகத்தை பொறுத்தவரை, நாங்கள் கணித்தபடியே அனைத்தும் நடைபெறுகிறது.

வளர்ச்சி :
மின்னணு சில்லரை விற்பனை தொழில், இன்னும் பரவலாக விரிவடையாமல் உள்ளது.இத்துறை வளர்ச்சிக்கான கொள்கைகளை உருவாக்குவதில், அரசுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு, வருங்காலத்தில் கிடைக்கும் என, நம்புகிறோம். அதன் மூலம், உள்நாட்டு தயாரிப்பாளர்கள், விவசாயிகள், சப்ளையர்கள் உள்ளிட்டோர் வளர்ச்சியும், வளமும் பெறுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய விதிமுறைகள்:
 வலைதள சந்தை நிறுவனங்கள், ‘சிறப்பு சலுகைகளை வழங்க வேண்டும்’ என, சப்ளையர்களை வற்புறுத்தக் கூடாது
 இந்நிறுவனங்கள், பங்கு முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது
 ஒரு நிறுவனத்தின் பொருட்கள் விற்பனையில், ஒரு வலைதள சந்தை நிறுவனத்தின் பங்கு, 25 சதவீதத்தை மீறக் கூடாது
 அன்னிய நேரடி முதலீட்டு விதிகளை பின்பற்றியது தொடர்பான ஆண்டறிக்கையை கட்டாயம் வழங்க வேண்டும்
 ரொக்கத்தை திரும்ப அளிக்கும், ‘கேஷ்பேக்’ திட்டம், ஒளிவு மறைவின்றி, நியாயமான வகையில் இருக்க வேண்டும்.

மூலக்கதை