காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையை சேர்ந்த 2 தமிழக வீரர்கள் உள்பட 40 பேர் பலி!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

காஷ்மீர் தீவிரவாதிகளின் தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 2 தமிழக வீரர்கள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 40 பேரில் 2 பேர் தமிழக வீரர்கள்.

இவர்களில் சுப்பிரமணியன்(வயது 28) தூத்துக்குடி மாவட்டம், சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி-மருதம்மாள் தம்பதியரின் மகன் ஆவார். சுப்பிரமணியனின் தந்தையான கணபதி விவசாயி. 
சுப்பிரமணியன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் சேர்ந்தார். சென்னை உள்ளிட்ட இடங்களில் பணியாற்றிய அவர், தற்போது காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றி வந்தார்.

இவருக்கு கிருஷ்ணவேணி (23) என்ற மனைவி இருக்கிறார். குழந்தை இல்லை. 

பொங்கல் பண்டிகைக்காக ஊருக்கு வந்த சுப்பிரமணியன் கடந்த 10ம் தேதி தான்  ஊரில் இருந்து காஷ்மீருக்கு சென்று உள்ளார். இந்த நிலையில் தான்,  தீவிரவாத தாக்குதலில் சுப்பிரமணியன் பலியாகி உள்ளார். அவரது உயிரிழப்பு குறித்து தகவல் அறிந்ததும் பெற்றோர் மற்றும் மனைவி கிருஷ்ணவேணி,  உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதனர். 

தகவலறிந்த தூத்துக்குடி எஸ்.பி.முரளி ராம்பா, கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெபராஜ் ஆகியோர் சுப்பிரமணியன் வீட்டுக்குச் சென்று குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினர்.  உயிரிழந்த சுப்பிரமணியனுடன் கரூரைச் சேர்ந்த சரத்குமாரும் பணியாற்றி வருகிறார். சுப்பிரமணியனும், சரத்குமாரும் ஒரே அறையில் தங்கி இருந்துள்ளனர். இதனால் இருவரும் நண்பர்களாகி உள்ளனர்.

டி.எஸ்.பி.ஜெபராஜ், சரத்குமாரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, ‘தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான அனைவரின் உடல்களும் சிதைந்து விட்டதால், வீரர்கள் குறித்து அடையாளம் தெரியவில்லை. இருப்பினும் சுப்பிரமணியனின் தலையில் உள்ள தழும்பு, டீ சர்ட்டை வைத்து அடையாளம் காணப்பட்டது’ என்று சரத்குமார் கூறினார். 

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா கார்குடி கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் சின்னையன் (60). விவசாயி. இவரது மனைவி  சிங்காரவள்ளி (55). இவர்களது மகன் சிவச்சந்திரன் (33). 
எம்.ஏ.,பி.எட். பட்டதாரியான இவர், கடந்த 2010ம் ஆண்டு சி.ஆர்.பி.எப். வீரராக சேர்ந்தார். 2014ல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு, டிப்ளமோ நர்சிங் படித்த காந்திமதி (27) என்ற மனைவியும் சிவமுனியன் (2) என்ற மகனும் உள்ளனர். காந்திமதி தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.  

சிவசந்திரன் வீரமரணம் அடைந்த தகவலறிந்தும், இவரது மனைவி மற்றும் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். மேலும், கிராம மக்களும் திரண்டு சிவசந்திரன் வீட்டுக்கு வந்தனர். அங்கு அவரது படத்தை பார்த்து கதறி அழுதனர். 

இது குறித்து, சிவசந்திரனின் அப்பா சின்னையன் கூறுகையில், `சிறு வயது முதலே நாட்டுப்பற்று மிக்கவனாக இருந்து வந்தான். எப்போதும் நாடு நாடு என கூறுவான். நாட்டை காப்பாற்ற சென்றவன் வீட்டில் உள்ளவர்களை தனியாக தவிக்கவிட்டு சென்றுவிட்டான். விடுமுறையில் வந்திருந்தவன் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் பணிக்கு சென்றான். 

பகல் 2 மணியளவில் சிவசந்திரன் அவன் மனைவிக்கு போன் பேசினான். அரசு என்னதான் சலுகைகள் கொடுத்தாலும் இனி என் மகனின் உயிர் வராது. நாட்டுக்காக அவனை அர்ப்பணித்து கொண்டான்’ என்று கண்கலங்கியபடி கூறினார். 

சுப்பிரமணின், சிவசந்திரன் வீர மரணத்தால் அவர்களது கிராமங்கள் சோகத்தில் மூழ்கி உள்ளது. இவர்களது உடல் திருவனந்தபுரத்துக்கு வந்து, அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்படலாம் என்று தெரிகிறது.

சுப்பிரமணியனின் தந்தை கணபதி கூறுகையில், ``நான் சமீபத்தில் கண் அறுவை சிகிச்சை செய்தேன். கடந்த 13ம் தேதி மாலை சுப்பிரமணியன், என்னுடன் செல்போனில் பேசினான். அப்போது முறையாக கண் மருந்து உபயோகிக்குமாறும், உடல் நலத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறும் அடுத்த முறை விடுமுறையில் ஊருக்கு வருகிறேன் என்றான். ஆனால் அதற்குள் இப்படி ஆகிவிட்டது. 

நாங்கள் அவரை நம்பித் தான் இருந்தோம். எங்கள் குடும்பத்திற்கு மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும்’ என்று கூறி கதறி அழுதார்.

வாழ்வே இருண்டது மனைவி கதறல்

தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான சுப்பிரமணியன் மனைவி கிருஷ்ணவேணி கூறுகையில், ‘திருமணம் முடிந்ததில் இருந்து என்னை மிகுந்த அன்போடு பார்த்துக் கொண்டார்.  மதியம் 2 மணிக்கு செல்போனில் பேசினார். அப்போது எனது உடல் நலத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறும், நான் பணியில் சேர்ந்த பின்னர் மீண்டும் பேசுகிறேன் என்றார்.

பின்னர் நான் மீண்டும் அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என வந்தது. பின்னர் தான் அவர் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான விவரம் தெரியவந்தது. எனது வாழ்வே இருண்டு விட்டது போல் உள்ளது’ என கதறி அழுதபடி கூறினார்.
 
சிவசந்திரன் மனைவி காந்திமதி கூறுகையில், `எனது கணவர், பொங்கல் அன்று மகனுக்கு ராணுவ வீரர் உடையை வாங்கி அணிவித்து அழகு பார்த்தார். லீவு முடிந்ததும் காஷ்மீருக்கு சென்றார். ஆனால், டி.வி. செய்தியை பார்த்துபோது, தீவிரவாதிகளின் தற்கொலை தாக்குதலில் எனது கணவர் இறந்துவிட்டார் என தெரிந்தது’ என்று கூறி கதறினார். 

மூலக்கதை