வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு ரூ2000 நிதி வழங்குவது எப்படி? -தமிழக அரசு விளக்கம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு ரூ2000 நிதி வழங்குவது எப்படி? தமிழக அரசு விளக்கம்!

தமிழக அரசு அறிவித்து உள்ள வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு 2,000 நிதி உதவி வழங்குவது எப்படி என்பது குறித்து அரசு விளக்கம்  அளித்துள்ளது.

 தமிழகத்தில், வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகள் 60 லட்சம் பேருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.2,000 நிதி உதவி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் விதி எண் 110 ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 11ம் தேதி அறிவித்தார்.

இதையடுத்து, ஊரக மற்றும் நகர்ப்புற வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கான சிறப்பு நிதி உதவி வழங்கப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது. இது குறித்து ஊரக வளர்ச்சி துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா  வெளியிட்டு உள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: 

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கஜா’ புயலின் பாதிப்பு, பருவமழை பொய்த்தது, வறட்சியால் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களுக்கு அரசின் சிறப்பு நிதி உதவியாக ரூ.2,000 வழங்கப்படும்.

ஊரக பகுதிகளை பொறுத்தவரை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் பராமரிக்கப்படும் இ-மதி இணையதளத்தில், மக்கள் நிலை ஆய்வு (பிஐபி) கணக்கெடுப்பு மூலம் ஏழை மற்றும் மிகவும் ஏழை குடும்பங்களின் தொகுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் இதற்காக பயன்படுத்தப்படும். 

நகர்ப்புறங்களை பொறுத்தவரை வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களின் புள்ளி விவரங்கள் (பிபிஎல் லிஸ்ட்) இதற்கு பயன்படுத்தப்படும். அந்தோதய அன்ன யோஜனா பயனாளிகள் விடுபட்டு இருந்தாலும் இந்த பட்டியலில் சேர்க்கப்படும்.

இந்த சிறப்பு நிதி உதவி பெறும் ஏழைகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும். இதற்காக பயனாளிகளிடம் இருந்து வங்கிக் கணக்கு, வங்கி ஐஎப்எஸ்சி குறியீடு எண், பொது விநியோக குடும்ப அட்டை எண், ஆதார் எண், குடும்ப தலைவரின் தொழில் போன்ற விவரங்கள் நேரடியாக சேகரிக்கப்படும். 

ஊரகப் பகுதிகளைப் பொறுத்த வரையில், பயனாளிகளின் விவரங்கள் சேகரித்து சரி பார்க்கப்பட்ட பிறகு கிராம ஊராட்சியின் பெயர் விவரத்துடன் இ-மதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். 
நகர்ப்புறங்களைப் பொறுத்த வரையில், கூடுதல் விவரங்கள் சேகரித்து சரிபார்த்த பின் வார்டு, மண்டலங்களின் பெயர் விவரங்களுடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.  

இந்த பணிகளை தினசரி ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளின் அறிக்கையை மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) ஆகியோரும், சென்னை மாநகராட்சியில் ஆணையர் மற்றும் மண்டல துணை ஆணையர்களுக்கும் அனுப்ப வேண்டும்.  

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

நிதி உதவி அளிக்கும் பணிகளை கண்காணிக்க மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு மகளிர் திட்ட இயக்குனர் (ஒழுங்கிணைப்பாளர்) மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், மாவட்ட தொழிலாளர் நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர், மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர், பேரூராட்சி உதவி இருக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாக கொண்ட 7 பேர் குழு அமைக்கப்படுகிறது.  சென்னை மாநகராட்சியில், சென்னை மாநகராட்சி ஆணையரை தலைவராக கொண்டு மண்டல துணை ஆணையர் (ஒருங்கிணைப்பாளர்) மற்றும் துணை ஆணையர் (கல்வி), மகளிர் திட்ட இயக்குநர், மாவட்ட தொழிலாளர் நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோர் உறுப்பினர்களாக கொண்ட 7 பேர் குழு அமைக்கப்படுகிறது. 

சிறப்பு நிதி உதவியான ரூ.2,000 ஊரக பகுதிகளில் உள்ளவர்களுக்கு திட்ட இயக்குநர், மகளிர் திட்டம் மூலமாகவும், நகர்ப்புறத்திற்கான நிதி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலமும் பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் அரசு  அறிவித்துள்ளது.

மூலக்கதை