பெங்களூரு எலகங்கா விமானப்படை மைதானத்தில் 12வது சர்வதேச விமான கண்காட்சி தொடங்கியது: மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் துவக்கினார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெங்களூரு எலகங்கா விமானப்படை மைதானத்தில் 12வது சர்வதேச விமான கண்காட்சி தொடங்கியது: மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் துவக்கினார்

பெங்களூரு: பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி எலகங்கா விமானப்படை திடலில் இன்று காலை தொடங்கியது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தொடங்கி வைத்தார்.

ஆசிய நாடுகளில் சிங்கப்பூர், அபுதாபி மற்றும் இந்தியாவில் பெங்களூருவில்  நடத்தப்படுகிறது. மாநகரின் எலங்காவில் உள்ள விமான பயிற்சி படைக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 75 ஆயிரம் சதுர அடியில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை விமான கண்காட்சி நடக்கிறது.

இவ்வாண்டு நடைபெறுவது 12வது சர்வதேச விமான கண்காட்சியாகும். இந்த கண்காட்சி இன்று தொடங்கி 24ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

காலை 9. 10 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். கர்நாடக முதல்வர் எச். டி. குமாரசாமி, மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு, மத்திய இணையமைச்சர் சுபாஷ் பாப்ரே மற்றும் அமெரிக்கா, ஜப்பான், இஸ்ரேல், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கண்காட்சியில் இந்திய விமான படைக்கு சொந்தமான போர் விமானமான சுகோய், சாரங், சூரிய கிரண், ரபேல், ஏஇடப்ளிவ் அண்ட் சி, யகோட் லான்ஸ், அட்வான்ஸ்டு இலகுரக ஹெலிகாப்டர், தேஜஸ், நேஷனல் ஏரோனாடிக்கல் நிறுவனம் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரித்துள்ள சாரஸ் பிடி1 என், எம்ஐ 17, சுகோய் 30 எம்கே. ஐ, ஆண்டனோவா 132 டி, ஹாக் ஐ, எச்டிடி 40 உள்பட 59 விமானங்கள் சாகசம் நிகழ்த்தி வருகிறது.

இது தவிர யுனைடெட் ஏர்கிராப்ட் கார்பரேஷன் நிறுவனத்தின் பேரிவ் பிஇ-200,  ஸ்வீடன் நாட்டின் ஸ்கேண்டி நேவியன், இங்கிலாந்து நாட்டின் எவோல்வேகோஸ்  உள்பட 72 விமானங்களின் சாகசம் நடக்கிறது.

கண்காட்சியில் இந்தியா உள்பட 31 நாடுகளில் இயங்கிவரும் 36 விமான தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்துள்ள விமானங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.

இந்தியாவில் தயாரித்துள்ள நீரில் நீந்திச் செல்லும் தன்மை கொண்ட ஆம்பிபியஸ் விமானம், முதல் முறையாக கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.   விமான நிலைய மைதானத்தில் 165 நாடுகளில் இயங்கிவரும் விமான உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள பொருட்களின் விற்பனை 403 இடம் பெற்றுள்ளது.

விமான கண்காட்சி முன்னிட்டு எலகங்கா பகுதி முழுவதும் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை, கர்நாடக போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

.

மூலக்கதை