காங். தொண்டர்கள் கொலை ஏன்? சிபிஎம் நிர்வாகி பகீர் வாக்குமூலம்: உண்மைத்தன்மை அறிய போலீசார் தீவிரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
காங். தொண்டர்கள் கொலை ஏன்? சிபிஎம் நிர்வாகி பகீர் வாக்குமூலம்: உண்மைத்தன்மை அறிய போலீசார் தீவிரம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு அருகே பெரியா பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களான பெரியா கல்யோடு பகுதியை சேர்ந்த கிரிபேஸ் (19), சரத்லால் (28) ஆகியோர் வெட்டி கொல்லப்பட்டனர். இதை கண்டித்து நேற்று முன்தினம் கேரளாவில் முழு அடைப்பு ேபாராட்டம் நடத்தப்பட்டதுடன் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட இருவரின் உடல்களும் நேற்று மாலை ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

உடல்களை கொண்டு செல்லும் போது வழியில் ஏராளமான கடைகள் அடித்து உடைக்கப்பட்டன. சில கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது.

இதனிடையே இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்பு உடையவர்களை பிடிக்க குற்றப்பிரிவு டிஎஸ்பி பிரதீப் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெரியா பகுதி சிபிஎம் உறுப்பினர் பீதாம்பரம் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பீதாம்பரம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிரிபேஸும், சரத்லாலும் பெரியாவில் வைத்து என்னை தாக்கினர்.

அப்போது எனது கை ஒடிந்தது.

சிபிஎம் நிர்வாகியான என்னை இருவரும் சேர்ந்து தாக்கியதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

இதுகுறித்து நான் கட்சி தலைமையிடம் புகார் செய்தேன். ஆனால் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

போலீசார் வழக்கு பதிவு செய்தபோதிலும் கிரிபேசையும், சரத்லாலையும் கைது செய்யவில்லை. இது எனக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதனால்தான் அவர்கள் இருவரையும் கொலை செய்ய தீர்மானித்தேன். எனது நண்பர்களிடம் இது குறித்து கூறினேன்.

அவர்கள் உதவுவதாக கூறினர். திட்டம் தீட்டி நானும், எனது நண்பர்களும் சேர்ந்து கிரிபேசையும், சரத்லாலையும் வெட்டி கொன்றோம்.

அந்த சமயத்தில் நான் கஞ்சா போதையில் இருந்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் இந்த வாக்குமூலத்தை போலீசார் முழுமையாக நம்பவில்லை என்று தெரிகிறது. இந்த இரட்டை ெகாலை சம்பவம் தொடர்பான முக்கிய நபர்களை தப்பிக்க வைத்து, வழக்கை திசை திருப்ப பீதாம்பரம் தானே கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளதாகவும் கருதப்படுகிறது.

இந்த நிலையில் பீதாம்பரம் நேற்று சிபிஎம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

.

மூலக்கதை