சிவகங்கையில் பரபரப்பு டவுன் பிளானிங் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சிவகங்கையில் பரபரப்பு டவுன் பிளானிங் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு

சிவகங்கை: சிவகங்கை மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் அலுவலகத்தில் (டவுன் பிளானிங் அலுவலகம்) லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தி கணக்கில் வராத பணத்தை கைப்பற்றினர். சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் அலுவலகம் உள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் வீடுகள், கட்டிடங்கள் கட்ட இந்த அலுவலகத்திடம் தான் தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) வாங்க வேண்டும்.

ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் வீடுகள், கட்டிடங்கள் கட்ட அரசு அனுமதிக்கு ரூ. 500 கட்டணம் செலுத்தி ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் இந்த அலுவலகத்திற்கு சென்று சான்று பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது அரசு விதிமுறை. ஆனால் 1000, 1500 சதுர அடிகளுக்குள் வீடு, சிறிய கடைகள் கட்டுபவர்கள் இந்த அலுவலகம் சென்றால் மொத்த மதிப்பீட்டில் மூன்று சதவீதம் லஞ்சம் வழங்கினால் மட்டுமே தடையில்லா சான்று கிடைக்கும்.

1000 சதுர அடிக்கு மேல் பெரிய வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், இடங்களை பிளாட்டுகளாக பிரித்தல் உள்ளிட்டவைகளுக்கு அதிமுக பெரும்புள்ளிகளுடன் தொடர்புள்ள மதுரையில் உள்ள சில நபர்களிடம் சிவகங்கை அலுவலகம் மூலமாக அனுப்புகின்றனர். அங்கு மொத்த மதிப்பீட்டில் மூன்று சதவீதம் பணம் வழங்க வேண்டும்.



பின்னர் இந்த அலுவலகத்திற்கு குறிப்பிட்ட சதவீதம் பணம் லஞ்சமாக வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே சான்றிதழ் கிடைக்கும்.

இல்லையெனில் ஏதேனும் காரணம் கூறி அனுமதியை இழுத்தடித்து பின்னர் சான்றிதழே கிடைக்காமல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ரகுபதி தலைமையிலான போலீசார் திடீரென சோதனை நடத்தினர்.

அப்போது, அலுவலகத்தில் ஊழியர்களிடமிருந்து கணக்கில் வராத பணம் ரூ. 24 ஆயிரத்து 970ம், துணை இயக்குநர் காவியாவின் காரில் இருந்து ரூ. 26 ஆயிரத்து 20 கைப்பற்றப்பட்டது. மேலும் இந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அவர்களாகவே தனிநபர்களை பணிக்கு நியமித்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து அலுவலகத்தில் இருந்து ஏராளமான ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.

தொடர்ந்து இரவிலும் சோதனை நடந்தது.

.

மூலக்கதை