அடகு கடையில் 1500 பவுன் கொள்ளை: 10 பேரிடம் விசாரணை; திடுக் தகவல் அம்பலம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அடகு கடையில் 1500 பவுன் கொள்ளை: 10 பேரிடம் விசாரணை; திடுக் தகவல் அம்பலம்

மதுரை: மதுரை, நரிமேடு, மருதுபாண்டியர் நகரை சேர்ந்தவர் கோபிநாத் (45). இவர் கட்டபொம்மன் நகரில் 3 ஆண்டுகளாக நகை அடகுக்கடை நடத்தி வருகிறார்.

இவர் நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ, லாக்கர் வெல்டிங் மிஷின் மூலம் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 1,500 பவுன் நகை, ரூ. 9 லட்சம் ரொக்கப்பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக தல்லாகுளம் போலீசில் புகார் கொடுத்தார்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர்.

மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. நாய் தெருமுனை வரை ஓடி நின்றது.

கடையில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது முகமூடி அணிந்த 3 பேர் உள்ளே வந்ததும், பின்பு அவர்கள் கேமராவை உடைத்ததும் பதிவாயிருந்தது. இதனால் கொள்ளையர்கள் கடையை உடைத்து, உள்ளே சென்றதும், முதலில் சிசிடிவி கேமராவை உடைத்து விட்டு, பின்பு 1,500 பவுன் நகைகள், ரூ. 9 லட்சத்தை கொள்ளையடித்து சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ. 3. 50 கோடி. கொள்ளை சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள 3 தனிப்படை போலீசார், 10 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ‘கோபிநாத் அடகுக்கடையை நீண்ட நாட்களாக மர்மநபர்கள் கண்காணித்து வந்துள்ளனர்.

அடகுக்கடை பகுதியில் எத்தனை கேமரா உள்ளது என தீவிரமாக நோட்டமிட்டு வந்துள்ளனர்.   நேற்றுமுன்தினம் இரவு அடகுக்கடையை உடைத்து நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர்.

கொள்ளை நடந்த தெருவில் சில வீடுகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள கேமரா காட்சி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

.

மூலக்கதை