செங்கல்பட்டு அருகே செங்கல்சூளையில் 11 கொத்தடிமைகள் மீட்பு: ஆர்டிஓ நடவடிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
செங்கல்பட்டு அருகே செங்கல்சூளையில் 11 கொத்தடிமைகள் மீட்பு: ஆர்டிஓ நடவடிக்கை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே செங்கல்சூளையில் 3 குழந்தைகள் உட்பட 11 கொத்தடிமைகளை ஆர்டிஓ மீட்டார். செங்கல்பட்டு அடுத்த கொளத்தாஞ்சேரியில் தனியார் செங்கல்சூளை உள்ளது. இங்கு, கடந்த 6 மாதங்களாக 2 குடும்பங்களை சேர்ந்த 11 பேர் கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக நேற்று செங்கல்பட்டு ஆர்டிஓ. க்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆர்டிஓ முத்துவடிவேல், தாசில்தார் பாக்கியலட்சுமி மற்றும் வருவாய் துறையினர் நேற்று செங்கல்சூளையில் ஆய்வு செய்தனர்.

அங்கு, திண்டிவனம் அடுத்த வேங்கை, குரும்பபேட்டை கிராமங்களை சேர்ந்த குமார், மகாலிங்கம், குப்பம்மாள், அங்கம்மாள், விஜயலட்சுமி, மாரியம்மாள், செல்வி, பொம்மி, கோமளா (5), ஜெய (5), கீர்த்திம்மா (3) ஆகியோர் கொத்தடிமைகளாக வேலை செய்து வருவது தெரிந்தது.

விசாரணையில், செங்கல்சூளை அதிபர், கடந்த 6 மாதங்களுக்கு முன் ₹1 லட்சம் முன்பணம் கொடுத்து செங்கல் அறுக்க அழைத்து வந்துள்ளார். பின்னர் குறைந்த கூலி கொடுத்து, மீதி பணத்தை அட்வான்சில் கழித்து விடுவதாகவும், எங்களை வேறெங்கும் வேலைக்கு செல்ல விடாமல் கொத்தடிமைகளாக வேலை வாங்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து 11 பேரையும் மீட்டு, செங்கல்பட்டு ஆர்டிஓ அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு துணி, ரேஷன் பொருட்கள் மற்றும் பணம் கொடுத்து, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பந்தப்பட்ட செங்கல்சூளை அதிபரிடம் விசாரித்து வருகின்றனர்.

.

மூலக்கதை