அண்ணாநகரில் 69.37 கோடியில் 14,649 சிசிடிவி கேமரா

தமிழ் முரசு  தமிழ் முரசு
அண்ணாநகரில் 69.37 கோடியில் 14,649 சிசிடிவி கேமரா

அண்ணாநகர்: அண்ணாநகரில் 69. 37 கோடியில் புதிதாக 14,649 சிசிடிவி கேமராக்களை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ. கே. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் அண்ணாநகர், திருமங்கலம், கோயம்பேடு, வில்லிவாக்கம் ஆகிய காவல் சரகங்கள் உள்ளன.

இந்த சரகங்களில் 50 மீட்டர் இடைவெளியில், 69. 37 கோடி மதிப்பீட்டில், கடந்த ஒரு மாதத்தில் புதிதாக 14,649 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்றன. இப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, அண்ணாநகர் டவர் பூங்காவில் நேற்று மாலை சிசிடிவி கேமராக்கள் துவக்க விழா நடைபெற்றது.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ. கே. விஸ்வநாதன், புதிய சிசிடிவி கேமராக்களின் கண்காணிப்பு பணிகளை துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், ‘இந்த ஆண்டு துவக்கத்திலேயே அதிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பகுதியாக அண்ணாநகர் காவல் மாவட்டம் விளங்குகிறது. அண்ணாநகர் பகுதியில் கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு சம்பவங்கள் பெருகியிருந்தன.

இப்போது பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா கண்காணிப்பு பணிகளால் மிகப்பெரிய அளவிலான குற்றச்சம்பவங்கள் குறைந்திருக்கிறது. இதுபோன்ற சிசிடிவி கேமராக்களால் விசாரணையில் விரைவும் துல்லியமும் அதிகரித்துள்ளது.

10 பேரை பிடித்து விசாரிக்க வேண்டிய இடத்தில், கேமராவில் பதிவான சந்தேக நிலையில் இருப்பவரை அடையாளம் காண முடிகிறது. இதனால் போலீசாரின் வேலை எளிதாவதோடு, துல்லிய விசாரணையும் நடத்த முடிகிறது.

இதன்மூலம் அண்ணாநகர் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கும்’ என்றார்.

நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் விஜயகுமாரி, துணை ஆணையர் சுதாகர் மற்றும் உதவி கமிஷனர்கள் குணசேகர், ஜான்சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

.

மூலக்கதை