மீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற திட்டம் மீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற திட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற திட்டம் மீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற திட்டம்

புதுடெல்லி: மீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற, பாஜ கட்சி சில கட்சிகளுடன் வைத்துள்ள கூட்டணி கணக்குகள் அம்பலமாகி உள்ளது. அந்த வகையில் தலைவலி ஏற்படுத்திய பங்காளிகளை சரிகட்டியது எப்படி?, மாநில கட்சிகளை வளைத்து போட்டு வருவது எப்படி? போன்றவை குறித்து பரபரப்பு பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலில், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மூன்று முக்கிய இந்தி பேசும் மற்றும் பாஜ ஆட்சியில் இருந்த மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிப் பெற்றது.

அங்கு ஆட்சியை பறிகொடுத்த பாஜ, தேர்தல் முடிவுக்கு பின்னர் தன் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளை வழிநடத்தும் முறையில் பெரிய மாற்றத்தைச் சந்தித்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் பாஜ தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர், தங்களை பழைய நிலையை மாற்றிக் கொண்டு கூட்டணி அமைப்பதில் புதிய யுக்தியை கையாண்டு வருகின்றனர்.

கடந்த 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கிடைத்த மாபெரும் வெற்றி மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் கிடைத்த தொடர் வெற்றிகள், மோடியை மையமாக வைத்து இயங்கினாலும், கூட்டணிக் கட்சிகளின் அதிருப்தி அவ்வப்போது வெளிப்பட்டது. வரவுள்ள மக்களவைத் தேர்தலில், பாஜவுக்கு வேறு வழியில்லாத நிலையில், அதிகமான மக்களவைத் தொகுதிகளைக் கேட்டாலும் பரவாயில்லை, கூட்டணியில் இருந்து கட்சிகளை விலக்கி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து அதனால் ஏற்படும் பாதிப்பை கட்சி தலைமை உணர்ந்துள்ளது.

கடந்த மக்களவை தேர்தலுக்கு முந்தைய கூட்டணி மட்டுமல்லாது, தற்போதைய தேர்தலுக்கு புதியதாக சில கட்சிகளை கூட்டணியில் இணைக்கும் வேலையிலும் ஈடுபட்டுள்ளது.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, ‘தனியாகவே தேர்தலைச் சந்திப்போம்’ என்று கூறினாலும், ‘பாஜ - சிவசேனா கூட்டணி ஒன்றாகவே தேர்தலைச் சந்திக்கும்’ என்று அமித் ஷா கூறுவார். இப்படி, அந்த கட்சிக்குள் மகாராஷ்டிரா மாநில பிரச்னை மட்டுமின்றி தேசிய பிரச்னைகளிலும், பாஜவின் பங்காளியாக இருந்து கொண்டு, சிவசேனா அதிக குடைச்சலை கொடுத்து வந்தது.

இந்நிலையில், எதிர்வரும் லோக்சபா தேர்தலை மேற்கண்ட இருகட்சிகளும் கடந்த தேர்தலை போல, இந்த தேர்தலிலும் சந்திக்கும் வகையில், கூட்டணி ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தில் மொத்தம் இருக்கும் 48 மக்களவைத் தொகுதிகளில், பாஜ 25 இடங்களிலும் சிவசேனா 23 இடங்களிலும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது.

கடந்த 30 ஆண்டுகளாக இரண்டு கட்சிகளும் கூட்டாளிகளாகத்தான் இருந்தன. தேர்தலில் கூட்டணி வைத்துத்தான் போட்டியிட்டன.

ஆனால், 2014ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், இருவரும் தனித்து நின்று தேர்தலை சந்தித்தனர்.

ஆனால், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.

சிவசேனா, பாஜவுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து வந்தாலும், பாஜவையும் பிரதமர் மோடியையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தது. ஆனால், இப்போது இரு கட்சிகளுக்கும் இடையில் இருந்த முரண் பேசித் தீர்க்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது.

லோக்சபா தேர்தலில், பாஜவுக்கு அதிக இடங்களை விட்டுக் கொடுப்பதிலும், சிவசேனா தாராளம் காட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்குக் காரணம், அடுத்து வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில், முதல்வர் பதவியை சிவசேனா கேட்டுள்ளதால், அதை மனதில் வைத்து தற்போது சிவசேனா சமரசம் செய்து கொண்டுள்ளது.

இதற்கிடையே, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து வரும் ஒருசில நாட்களில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து அறிவிப்பை வெளியிட உள்ளது. பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்துடன் 17 தொகுதிகள் வீதம் தொகுதிப் பங்கீடு பாஜ செய்துள்ள போதிலும், லோக் ஜனசக்தி கட்சிக்கு 6 தொகுதிகளை பாஜக வழங்கியுள்ளது.

அக்கட்சித் தலைவர் ராம் விலாஸ் பஸ்வானுக்கு அஸ்ஸாமில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்படலாம் என்று தெரிகிறது. கடந்த 2014ல் பீஹாரில் 30 தொகுதிகளில் போட்டியிட்டு 22 தொகுதிகளில் வென்ற பாஜ, தற்போது நிதிஷ் குமாருடன் மீண்டும் கூட்டணி அமைத்தபின் இப்போது 17 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது.

அங்கு கூட்டாளியாக இருந்த உபேந்திர குஷ்வாஹாவின் கட்சி காங்கிரஸ் - ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து செயல்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தின் சிறிய கூட்டாளியாக இருக்கும் அப்னா தள் கட்சி பாஜ தங்களுக்கு போதிய மரியாதை கிடைக்கவில்லை என்று கருதுகிறது. அதனால், அந்த கட்சியை சரிக்கட்டும் வேலையில் மாநில பாஜ தலைமை ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையே, தென்மாநிலங்களில் தெலுங்குதேசம் கட்சி பாஜ கூட்டணியில் இருந்து விலகியதால், பாஜவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் ஆளும் அதிமுகவுடன் பாஜ கட்சி கூட்டணி அமைத்து 5 இடங்களில் போட்டியிடுகிறது.

கூட்டணியில் பங்காளிகளாக இருந்தவர்களை சரிகட்டியும், புதிய கட்சிகளை இணைத்தும், மீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற பாஜ தலைவர்கள் பல வழிகளில் கட்சிகளை வளைத்து போடும் வேலையில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக, அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

.

மூலக்கதை