கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்காவிடில் திமுக ஆட்சிக்கு வந்ததும் தீர்வு காணப்படும்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்காவிடில் திமுக ஆட்சிக்கு வந்ததும் தீர்வு காணப்படும்

திருவள்ளூர்: பொதுமக்களின் கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக ஆட்சிக்கு வந்ததும் தீர்வு காணப்படும் என்று கொரட்டூரில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேசினார். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த கொரட்டூரில் திமுக ஊராட்சி சபை கூட்டம் இன்று நடந்தது.

தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா. மு. நாசர் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் டி. தேசிங் வரவேற்றார்.

இதில் வி. ஜி. ராஜேந்திரன் எம்எல்ஏ, முன்னாள் எம்பி ஆ. கிருஷ்ணசாமி, பரந்தாமன், பூவை ஜெரால்டு, ஆதிசேஷன், திராவிடபக்தன், ஜெ. ரமேஷ், காயத்ரி தரன், பூவை ஜெயக்குமார், பூவை ரவிக்குமார், ஆர். ஜெயசீலன், புஜ்ஜி ராமகிருஷ்ணன், தி. ேவ. முனுசாமி, பிரபு கஜேந்திரன், வடிவேல், பூவை ஜெ. சுதாகர், எம். பர்கதுல்லாகான், புன்னப்பாக்கம் கே. முகமது ரபிக் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கட்சி தலைவர் மு. க. ஸ்டாலின் பேசியதாவது: இது கட்சி கூட்டம் அல்ல. பொதுமக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்வு காண நடைபெறும் ஊராட்சி கூட்டம்.

இதில், பெண்கள், தங்களது பணிகளை விட்டு விட்டு பங்கேற்றுள்ளீர்கள். இந்த கொரட்டூர் கிராமமும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்டது.

இந்த தொகுதி ஓராண்டாக எம்எல்ஏ இல்லாமல் அனாதையாக உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் பூந்தமல்லி தொகுதிக்கு இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளது.

கிராமங்கள்தான் கோயில்கள் என காந்தி கூறியுள்ளார். இந்த கோயிலை தேடி பக்தனான நான், இங்கு வந்துள்ளேன்.

நீங்கள் கொடுக்கும் மனுக்களை பெற்று, மாவட்ட கலெக்டரிடம் பேசி, உரிமைகளை கேட்பேன். அதற்கான அதிகாரம் எனக்கு உள்ளது.

இந்த ஆட்சியில், கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக ஆட்சிக்கு வந்ததும் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களாகிய நீங்கள், கட்டுக்கோப்புடன் வந்துள்ளதை பார்க்கும்போது, நிச்சயமாக திமுக ஆட்சிக்கு வரும்.

இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது, சுகாதார சீர்கேடு, குடிநீர் பிரச்னை, பஸ் வசதி, முதியோர் உதவித்தொகை நிறுத்தம், 100 நாள் வேலை உறுதி திட்டம் வழங்காதது உள்ளிட்ட பல பிரச்னை குறித்து பெண்கள் பேசினர். தொடர்ந்து மக்களிடம் மனுக்களை பெற்றார்.

இதைத் தொடர்ந்து தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா. மு. நாசர் தலைமையில் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் நடைபெறும் பாக முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்க மு. க. ஸ்டாலின் புறப்பட்டார்.

.

மூலக்கதை