பெங்களுருவில் சர்வதேச விமான கண்காட்சி 2019: ராணுவ வீரர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சாகசம்

தினகரன்  தினகரன்
பெங்களுருவில் சர்வதேச விமான கண்காட்சி 2019: ராணுவ வீரர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சாகசம்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களுருவில் விமான சாகச கண்காட்சியின் முதல் நாளான இன்று பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பிரான்சில் இருந்து வந்திருக்கும் ரபேல் விமானமும் இந்த சாகசத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசியாவிலயே மிகப் பெரிய போர் விமானங்கள் கண்காட்சி நடைபெறும். அதன்படி, இந்த முறை பெங்களூரு எலஹங்கா விமானப்படை தளத்தில் இன்று முதல் பிப்.24ம் தேதி வரை 12-வது முறையாக நடைபெற்று வருகிறது. இந்த ஏரோ ஷோ கண்காட்சியில் 403 விமான நிறுவனங்களும், 61 போர் விமானங்களும் பங்கேற்றுள்ளன. ஏரோ இந்திய விமானக் கண்காட்சி நிகழ்ச்சியில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, விமான சாசகங்களை நேரில் பார்வையிட்டார். விழாவில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உள்பட மந்திரிகள் பலர் கலந்து கொண்டனர். அதில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் ராணுவ வீரர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தாழப் பறந்தும் விமானங்கள் சாகசங்களில் ஈடுபட்டன. இந்த கண்காட்சியில் 403 விமான உற்பத்தி நிறுவனங்கள் கலந்துகொள்ள முன்பதிவு செய்திருந்தது. அந்த நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி குறித்து அரங்குகளை அமைத்துள்ளன. இந்த நிறுவனங்களுக்கான அரங்குகளை அமைக்க 28 ஆயிரத்து 398 சதுர மீட்டர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, உக்ரைன், சவுதி அரேபியா, ஜெர்மனி, இத்தாலி, இஸ்ரேல் உள்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் விமான உற்பத்தி நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன.

மூலக்கதை