அருண் ஜெட்லி தலைமையில் ஜிஸ்டி கவுன்சிலின் 33வது கூட்டம் : லாட்டரிகளுக்கு ஒரே ஜிஎஸ்டி விதிக்க வாய்ப்பு

தினகரன்  தினகரன்
அருண் ஜெட்லி தலைமையில் ஜிஸ்டி கவுன்சிலின் 33வது கூட்டம் : லாட்டரிகளுக்கு ஒரே ஜிஎஸ்டி விதிக்க வாய்ப்பு

டெல்லி : ஜிஸ்டி கவுன்சிலின் 33வது கூட்டம் இன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி  தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்பதால் ஜிஎஸ்டி கூட்டத்தை ஒத்திவைக்குமாறு டெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜிஸ்டி கவுன்சில் கூட்டத்தை ஒத்திவைக்க கோரிக்கை கட்டுமான துறையில் ஜிஎஸ்டி குறைப்பு மற்றும் லாட்டரிகளுக்கு ஒரே ஜிஎஸ்டி உள்ளிட்ட முக்கிய விஷயங்களை விவாதிக்கப்பட உள்ள நிலையில், காணொலி காட்சி மூலம் கூட்டத்தை நடத்துவது சரியாக இருக்காது என்று டெல்லி, கேரளா மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். எனவே ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் தேதியை ஒத்திவைக்குமாறு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லீக்கு அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஜிஎஸ்டியின் 33வது கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறும் என்றும் மாநில நிதி அமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் அருண் ஜெட்லி  ஆலோசனை நடத்துவார் என்றும் மத்திய நிதி அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. லாட்டரிகளுக்கு ஜிஎஸ்டி விதிப்புகட்டுமான துறையில் ஜிஎஸ்டி விதிப்பை மாற்றி அமைப்பதற்காக அமைக்கப்பட்ட மாநில நிதி அமைச்சர்கள் குழு வீடுகளுக்கான ஜிஎஸ்டியை 12%ல் இருந்து 5% ஆக குறைக்க முடிவு எடுத்திருந்தது. அதே போல் லாட்டரிகளுக்கு ஜிஎஸ்டி விதிப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட மகாராஷ்த்திரா மாநில நிதி அமைச்சர் சுதிர் முங்கண்டிவார்  உள்ளிட்ட 8 அமைச்சர்கள் கொண்ட குழு லாட்டரிகளுக்கு ஒரே ஜிஎஸ்டி விதிக்க ஒப்புதல் அளித்தது. மாநில அரசு நடத்தும் லாட்டரிகளுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் லாட்டரிகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இவற்றுக்கு ஒரே ஜிஎஸ்டியை விதிப்பது தொடர்பாக இன்று நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை