கேரளாவில் தனது ஆட்சிக்காலத்தில் அரசியல் படுகொலைகள் குறைக்கப்பட்டுள்ளது : முதல்வர் பினராயி விஜயன்

தினகரன்  தினகரன்
கேரளாவில் தனது ஆட்சிக்காலத்தில் அரசியல் படுகொலைகள் குறைக்கப்பட்டுள்ளது : முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம் : கேரளாவில் தனது ஆட்சிக்காலத்தில் அரசியல் படுகொலைகள் குறைக்கப்பட்டிருப்பதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் காசர்கோட்டில் கடந்த 17ம் தேதியன்று 2 இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இருசக்கர வாகனத்தில் சென்ற சரத் லால் மற்றும் கிரிபேஷ் ஆகியோர் மர்ம கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இதனை கண்டித்து கேரளாவில் நேற்று பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதனிடையே இதனிடையே இந்த கொலைகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சியினர்தான் காரணம் என இளைஞர் காங்கிரஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டினர். இதையடுத்து கேரளாவின் கண்ணூர், மலபார் பகுதிகளில் நடைபெற்றுள்ள அரசியல் படுகொலை குறித்து கேரள முதலமைச்சர் மவுனம் கலைக்க வேண்டும் என கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் வலியுறுத்தியிருந்தார். மேலும் பினராயி விஜயன் தனது ஆட்களிடம் ஆயுதங்களை கீழே போடச் சொல்ல வேண்டும், அப்போதுதான் கேரளாவில் அமைதி திரும்பும் என்று கூறினார். இந்நிலையில் காசர்கோடு சம்பவம் தொடர்பாக பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், 2 இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது என்று கூறினார். தனது ஆட்சிக்காலத்தில் அரசியல் படுகொலைகள் குறைந்திருப்பதாக கூறிய அவர், இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்மின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மூலக்கதை