பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் எச்சரிக்கை: இந்தியா தாக்கினால் பதிலடி தருவோம்: ஓட்டு வாங்க பழி போடுவதாகவும் குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் எச்சரிக்கை: இந்தியா தாக்கினால் பதிலடி தருவோம்: ஓட்டு வாங்க பழி போடுவதாகவும் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: புல்வாமா தீவிரவாத தாக்குதல் குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ‘‘இந்தியாவில் தேர்தல் நேரம் என்பதால், ஓட்டு வாங்குவதற்காகத்தான் எங்கள் மீது  பழி போடுகின்றனர். எங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டுமென இந்தியா யோசித்தாலே, நாங்கள் பதிலடி தருவோம்’’ என காட்டமாக பேசி உள்ளார்.காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 14ம் தேதி நடந்த கொடூரமான தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதி பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத  அமைப்பை சேர்ந்தவன் என கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய மக்கள் கொதித்துப் போய் உள்ளனர். பாகிஸ்தானுக்கு பதிலடி தர ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பதாக பிரதமர்  மோடியும் கூறி உள்ளார்.இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முதல் முறையாக நேற்று கருத்து தெரிவித்துள்ளார். வீடியோ பதிவு மூலம் அவர் கூறியிருப்பதாவது:இந்தியாவில் இது தேர்தல் நேரம். பாகிஸ்தான் மீது பழி போடுவதன் மூலம் மக்களிடமிருந்து எளிதில் ஓட்டுகளை பெற்று விடலாம் என எண்ணுகின்றனர். புல்வாமா சம்பவத்தால் எங்களுக்கு என்ன நன்மை கிடைத்துவிடப்  போகிறது? காஷ்மீரில் ஒவ்வொரு முறை தீவிரவாத சம்பவம் நடக்கும்போது, பாகிஸ்தான் மீது மீண்டும் மீண்டும் குற்றம்சாட்டுகின்றனர். புல்வாமா தாக்குதல் நடத்தியவன் பாகிஸ்தானை சேர்ந்தவன் என்பதற்கான உறுதியான ஆதாரம் இருந்தால் தாருங்கள். நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கிறேன். இதை அழுத்தத்திலோ, நிர்பந்தத்திலோ  சொல்லவில்லை. தீவிரவாதம் புரிபவர்கள் பாகிஸ்தானுக்கும் எதிரிதான். நாங்களும் கடந்த 15 ஆண்டாக தீவிரவாதத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறோம்.பாகிஸ்தானை பழி தீர்க்க வேண்டுமென இந்திய அரசியல்வாதிகள் பேசுவதை மீடியாக்கள் மூலமாக நானும் பார்த்தேன், கேட்டறிந்தேன். பாகிஸ்தானை தாக்க வேண்டுமென இந்தியா நினைத்தால், நாங்கள் யோசித்துக்  கொண்டிருக்க மாட்டோம், பதிலடி தருவோம்.போரை தொடங்குவது நம் கையில்தான் உள்ளது. அது எளிதானது. ஆனால், அதன் முடிவு நம் கையில் இல்லை. என்ன நடக்கும் என்பதை யாராலும் யூகிக்க முடியாது. தீவிரவாதத்தை பற்றி இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த  நாங்கள் தயாராக இருப்பதாக ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டோம். இது புதிய பாகிஸ்தான், புதிய மனநிலை, கொள்கைகள் கொண்டது. இப்பிராந்தியத்தில் நிலவும் மிகப்பெரிய அச்சுறுத்தல் தீவிரவாதம்தான். அது எங்கள்  நலனுக்கு எதிரானது. யாரும் இங்கிருந்து வெளியில் சென்று தீவிரவாத செயல் புரிவதையோ, யாரும் இங்கு வந்து தீவிரவாதம் செய்வதையோ நாங்கள் விரும்பவில்லை. இப்பிராந்தியத்தில் நிலைத்தன்மை நீடிக்கவே பாகிஸ்தான்  விரும்புகிறது. நல்ல சூழல் உருவாகும், மீண்டும் இந்தியா அமைதி பேச்சுவார்த்தையை தொடங்கும் என்றே நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.ஆதாரங்கள் உள்ளன; இம்ரானுக்கு பதிலடி: இம்ரான்கான் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதற்கான  வலுவான ஆதாரங்கள், நமது பாதுகாப்பு படையிடமும், விசாரணை அமைப்பிடமும் உள்ளன. அதைப் பற்றி பாகிஸ்தானிடம் தெளிவாக தெரியப்படுத்தி உள்ளோம். நமது பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரம்  வழங்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி ஏற்கனவே கூறியிருக்கிறார். அதன்படி, திட்டமிட்டபடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியா பொறுப்புள்ள நாடு. நம் நாட்டு மக்களை எப்படி பாதுகாக்க  வேண்டும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி நன்றாகவே அறிவோம். தீவிரவாதத்தை தவிர்க்கும் வரை பாகிஸ்தானுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்த நாங்கள் தயாராக இல்லை. பேச்சுவார்த்தை நடக்க வேண்டும்  என்றால், தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். இதற்கு முன் நடந்த தாக்குதல்களின் போதும்,  ‘ஆதாரங்கள் தந்தால் நடவடிக்கை எடுப்போம்’ என பாகிஸ்தான் உறுதி தந்துள்ளது. ஆனால், மும்பை தீவிரவாத தாக்குதலில் (26/11)   அனைத்து ஆதாரங்களை தந்தும் இன்னும் நடவடிக்கைக்காக காத்திருக்கிறோம்’’ என்றார்.இந்தியா மறுப்பு: வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று விடுத்த அறிக்கையில், ‘புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு சம்பந்தமில்லை என  இம்ரான்கான் மறுப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஒவ்வொரு முறையும் இதே பதிலைத்தான்  திரும்பத் திரும்ப அவர்கள் கூறுகிறார்கள். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் நடத்திய தீவிரவாதியும் அந்த அமைப்பை சேர்ந்தவன். இந்த விஷயத்தை இம்ரான் ஒதுக்கிவிட்டார்.  ஜெய்ஷ் இ முகமது அமைப்பும், அதன் தலைவன் மசூத் அசாரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதை அனைவரும் அறிவர். பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க, இந்த ஆதாரமே போதுமானது’ என கூறப்பட்டுள்ளது.ஐநாவிடம் கெஞ்சல்: புல்வாமா சம்பவத்தை தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் உறவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதில் உடனடியாக தலையிட்டு சமாதானப்படுத்த ஐநா சபை உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது. ஐநா பொதுச்செயலாளர்  ஆன்டனியோ கட்டாரசுக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், ‘புல்வாமா தாக்குதல் நடத்தியவன் காஷ்மீரை சேர்ந்தவன். ஆனால், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தனது படைகளை பயன்படுத்தும்  என அச்சுறுத்தல் நிலவுகிறது. எனவே, இதனை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். பதற்றத்தை தடுக்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை