குஜராத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதாக அம்மாநில உளவுத்துறை எச்சரிக்கை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தினகரன்  தினகரன்
குஜராத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதாக அம்மாநில உளவுத்துறை எச்சரிக்கை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

குஜராத்: குஜராத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதாக அம்மாநில உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. காஷ்மீர் மாநிலத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ரஷித் என்ற கம்ரன் நேற்று காஷ்மீரில் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தீவிரவாதி கம்ரன் தலைமையில் 21 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவியது தெரிய வந்தது. அவர்கள் 3 குழுக்களாக பிரிந்து சென்றதாக உளவுத்துறை தற்போது கண்டுபிடித்துள்ளது. அதில் ஒரு பிரிவினர் குஜராத் மாநிலத்திற்குள் ஊடுருவி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் குஜராத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதாக அந்த மாநில உளவுத்துறையும் எச்சரித்துள்ளது.இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாநிலத்தின் முக்கிய நகரங்களில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சர்தார் சரோவர் அணைக்கட்டு, சோம நாத் ஆலயம் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சாதாரண உடைகளில் போலீசாரின் கண்காணிப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி குஜராத் முதல்-மந்திரி விஜய்ரூபானி நேற்று ஆய்வு செய்தார். அதிகாரிகளிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டு அறிந்தார். இதற்கிடையே குஜராத் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் அதிரடிப்படை போலீசார் தயார் நிலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை