டெல்லியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை

தினகரன்  தினகரன்
டெல்லியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை

டெல்லி : மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழக காங்கிரஸ் தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் அதிமுக-பாமக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக மற்றும் தேமுதிக இணைவது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடுகள் குறித்து இறுதிகட்ட பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றது.ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமத் பட்டேல் தமிழக காங்கிரஸ் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். மேலும் திமுக எம்.பி கனிமொழியுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்ளாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தங்கபாலு, திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ராமசாமி உள்ளிட்டோருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தமிழக மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கும் பங்கேற்றார். திமுக-காங்கிரஸ் கூட்டணி புதுச்சேரியையும் சேர்த்து 40 தொகுதிகளிலும் போட்டியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.  இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தை குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தாலும் வெற்றி பெறாது என்றும், பாஜக - அதிமுக கூட்டணி மூழ்கும் கப்பல் என்றும் விமர்சித்துள்ளார். இரு கட்சிகளின் கூட்டணி விவரம் குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும் காங்கிரஸ்-திமுக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளதாகவும், தேர்தல் பரப்புரைக்கு ராகுல் காந்தி தமிழகம் வருவார் என்றும் திருநாவுக்கரசர் தகவல் அளித்துள்ளார்.

மூலக்கதை