உலக கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டியில் ஓய்வு...கிறிஸ் கேல் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
உலக கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டியில் ஓய்வு...கிறிஸ் கேல் அறிவிப்பு

பார்படாஸ்: ஐசிசி உலக கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதாக வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கேல் அறிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி நட்சத்திர வீரர் கிறிஸ் கேல் (39 வயது), தனது அதிரடி ஆட்டத்தால் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர். ஐபிஎல் உட்பட பல்வேறு நாடுகளில் நடைபெறும் உள்ளூர்  டி20 தொடர்களிலும் விளையாடி வருகிறார். தேசிய அணிக்காக இதுவரை 103 டெஸ்ட், 284 ஒருநாள் மற்றும் 56 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.கடந்த ஆண்டு ஜூலையில் வங்கதேசத்துக்கு எதிராக விளையாடிய பின்னர், ஒருநாள் போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெறாத கிறிஸ் கேல், 6 மாத இடைவெளிக்குப் பின்னர் இங்கிலாந்து அணியுடன்  நடைபெற உள்ள தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் அவருக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், உலக கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக கேல் நேற்று அறிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது: கிரிக்கெட்டில் இன்னும் கூட நான் தான் ‘யுனிவர்சல் பாஸ்’.  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இதுவரையிலான எனது பங்களிப்பு மன நிறைவு அளிக்கிறது. உலக கோப்பையை வெல்வது என்பது ஒரு அதிசயக் கனவு. அது நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இளம்  வீரர்கள் என்னிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அணிக்காக முழு அர்ப்பணிப்புடன் விளையாடுவேன். அதே சமயம், இளம் வீரர்களுக்கு எனது அனுபவ ஆலோசனைகளை வழங்கி உற்சாகப்படுத்துவேன். உலக கோப்பையுடன்  ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். அதன் பிறகும் எனது கிரிக்கெட் பயணம் தொடரும். நல்ல உடல்தகுதியுடன் இருந்தால், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக  கோப்பை தொடரிலும் நிச்சயம் விளையாடுவேன். ஓய்வு பெற்ற பிறகு வர்ணனையாளர் அல்லது பயிற்சியாளராக செயல்பட விருப்பமில்லை. வேறு வகையில் எனது பங்களிப்பு இருக்கும். இவ்வாறு கேல் கூறியுள்ளார். இதுவரை 284 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9,727 ரன் (அதிகம் 215, சராசரி 37.12, சதம் 23, அரை சதம் 49) எடுத்துள்ள கேல், இன்னும் 273 ரன் எடுத்தால் 10,000 ரன் மைல் கல்லை எட்டும்  2வது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தலாம் (உலக அளவில் 14வது வீரர்).

மூலக்கதை