எல்லையில் 16 மணி நேரம் இந்திய ராணுவம் அதிரடி புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை: 5 வீரர்கள் வீரமரணம்

தினகரன்  தினகரன்
எல்லையில் 16 மணி நேரம் இந்திய ராணுவம் அதிரடி புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை: 5 வீரர்கள் வீரமரணம்

ஸ்ரீநகர்:  ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி கம்ரான் உட்பட மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஒரு ராணுவ அதிகாரி உட்பட 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அந்த மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருக்கு நெருக்கமானவன் கம்ரான். இவன் காஷ்மீரில் உள்ள இளைஞர்களை மூளைச் சலவை செய்து அவர்களை தீவிரவாத இயக்கத்தில் சேர்ப்பது மற்றும் அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பது போன்ற நடவடிக்கைகளை மறைமுறைமாக செய்து வந்தான்.கம்ரானை கடந்த பல ஆண்டுகளாக ராணுவ வீரர்கள் தேடி வந்தனர். ஆனால் அவன் அவ்வப்போது கிராமம், கிராமமாக தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்ததோடு, இளைஞர்களை தனது இயக்கத்தில் இழுக்கும் வேலையிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தான். அவனை பிடிக்க தொடர்ந்து வீரர்கள் முயற்சி செய்து வந்தனர். இந்நிலையில் எல்லையில் சுமார் 16 மணி நேரம் பாதுகாப்பு படையினர் நடத்திய தொடர் தாக்குதலில் தீவிரவாதி கம்ரான் சுட்டுக் கொல்லப்பட்டான். நேற்று முன்தினம் இரவு தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து, காஷ்மீர் எல்லையில் உள்ள பிங்லான் பகுதிக்கு பாதுகாப்பு படையினர் விரைந்தனர். இது சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கு அவர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு இருந்தபோது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்து வந்தனர். விடிய, விடிய சுமார் 16 மணி நேரம் இந்த துப்பாக்கிச்சூடு நீடித்தது.இதில் தேடப்பட்டு வந்த தீவிரவாதியும், புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவனுமான கம்ரான் மற்றும் மற்றொரு தீவிரவாதி காஜி ரஷீத், ஹிலால் அகமது ஆகிய மூன்று பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின்போது, ஒரு ராணுவ அதிகாரி உட்பட 4 ராணுவ வீரர்கள், ஒரு காவலர் ஆகியோரும் உயிரிழந்தனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்த ஒருவரும் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானார். இந்த சம்பவத்தின்போது பாதுகாப்பு படை வீரர்கள் 9 பேர் காயமடைந்தனர். இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் 4வது நாளாக நேற்றும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு இருந்தது.

மூலக்கதை