கொஞ்சம் அசந்தாலும் இந்தியா கை ஓங்கிவிடும்...ஆரோன் பிஞ்ச் உஷார்

தினகரன்  தினகரன்
கொஞ்சம் அசந்தாலும் இந்தியா கை ஓங்கிவிடும்...ஆரோன் பிஞ்ச் உஷார்

மெல்போர்ன்: இந்திய அணியுடன் விளையாடும்போது கொஞ்சம் அசந்தாலும் வெர்றி வாய்ப்பு கை நழுவி விடும் என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறியுள்ளார்.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி விசாகப்பட்டிணத்தில் 24ம் தேதியும், 2வது டி20 பெங்களூருவில் 27ம் தேதியும்  நடைபெற உள்ளன. இதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் நடைபெறும். இந்த தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச், இந்திய டூர் குறித்து மெல்போர்னில் நேற்று கூறியதாவது: பிக் பாஷ் டி20 தொடரில் மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணியை வெற்றிகரமாக வழிநடத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய சுற்றுப்பயணத்துக்கு உத்வேகம் பெற இதுபோன்ற வெற்றி எல்லாம் அவசியமே இல்லை. மிக வலுவான  இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வதே மிகப் பெரிய உத்வேகத்தை கொடுக்கும். உலக கோப்பைக்கு முன்பாக இப்படி ஒரு சவாலை சந்திப்பது எங்களுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது.அதே சமயம், கொஞ்சம் அசந்தாலும் இந்திய அணியின் கை ஓங்கிவிடும் என்பதை மிகத் தெளிவாக உணர்ந்துள்ளோம். இந்திய சுற்றுப்பயணத்தை மிகுந்த தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வது அவசியம். மேலும், தெளிவான  வியூகத்துடன் களமிறங்குவதும் முக்கியம். பிக் பாஷ் பைனலில் ரன் அவுட்டானது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தேன். சில சமயங்களில் அது கை கூடுவது இல்லை. இவ்வாறு பிஞ்ச் கூறியுள்ளார். மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியுடன் நடந்த பிக் பாஷ் பைனலில் சக வீரர் கேமரான் ஒயிட் அடித்த பந்து, பவுலர் ஜாக்சன் பேர்டு காலில் பட்டு எதிர்முனையில் இருந்த ஸ்டம்புகளை சிதறடித்தது. அந்த சமயத்தில் பிஞ்ச் கிரீசுக்குள்  இல்லாததால் ரன் அவுட்டாகி வெளியேற நேர்ந்தது. பெவிலியன் திரும்பிய பிஞ்ச், அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலியை தனது மட்டையால் ஓங்கி அடித்து உடைத்து நொறுக்கினார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பிக் பாஷ் ஒழுங்கு நடவடிக்கை குழு பிஞ்ச்சுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தது. அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை.

மூலக்கதை