புல்வாமா தாக்குதலை கண்டித்து பாக். அரசு இணையதளங்களை முடக்கிய இந்திய ஹேக்கர்கள்

தினகரன்  தினகரன்
புல்வாமா தாக்குதலை கண்டித்து பாக். அரசு இணையதளங்களை முடக்கிய இந்திய ஹேக்கர்கள்

புதுடெல்லி: பாகிஸ்தான் அரசின் பல்வேறு இணையதளங்களை இந்திய ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த 14ம் தேதி, பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது நடத்திய பயங்கர தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாயினர். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தான் உதவியிருப்பதாக  இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக பாகிஸ்தான் அரசின் பல்வேறு இணையதளங்கள் முடங்கி வருகின்றன. நேற்று முன்தினம் பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கப்பட்டது. இந்நிலையில்,  இந்தியாவின் டீம் ஐ குரு என்ற ஹேக்கர் அமைப்பு பாகிஸ்தான் அரசின் பல்வேறு இணையதளங்களை முடக்கியதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியுள்ளது. இணையதளத்தை முடக்கிய இந்திய ஹேக்கர்கள், ‘‘14/2/2019ஐ ஒருபோதும் நாங்கள் மறக்க மாட்டோம். இந்த சைபர் தாக்குதல், புல்வாமா தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு அர்ப்பணிக்கிறோம்’’ என்ற  தகவலை அனுப்பி உள்ளனர். பாகிஸ்தான் அரசு இணையதளங்கள் மீது இந்திய ஹேக்கர்கள் நடத்திய மிகப்பெரிய சைபர் தாக்குதலாக இது கருதப்படுகிறது. இதன் காரணமாக, பாகிஸ்தான் அரசின் சேவைகள்  பாதிக்கப்பட்டிருக்கின்றன.ஆஸி.யும் பாதிப்பு: ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்ற இணையதளம் முடக்கப்பட்டதாக இம்மாத துவக்கத்தில் தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் நேற்று  நாடாளுமன்றத்தில் பேசுகையில், ‘‘ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்ற இணையதளம் மட்டுமின்றி பல்வேறு கட்சிகளின் இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் பின்னணில் வெளிநாட்டு அரசின்  ஹேக்கர்கள் சம்மந்தப்பட்டுள்ளனர். அதிநவீன தொழில்நுட்ப ரீதியில் இந்த ஹேக்கிங் நடந்துள்ளது’’ எனக் கூறி உள்ளார்.

மூலக்கதை