சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை துவக்கம்: குல்பூஷணை விடுவிக்க வேண்டும்...இந்தியா வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்
சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை துவக்கம்: குல்பூஷணை விடுவிக்க வேண்டும்...இந்தியா வலியுறுத்தல்

தி ஹேக்: சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ் வழக்கு விசாரணை, நேற்று தொடங்கியது. இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ்(48). இவர் உளவு பார்த்ததாகவும், ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகவும் கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.  இதனையடுத்து ஜாதவிற்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. ஜாதவ் மீதான பாகிஸ்தானின் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவர், ஈரானில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்ததாகவும், அப்போது அவர் கடத்தப்பட்டதாகவும்  இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜாதவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து இந்தியா தொடர்ந்த வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றத்தின் 10 நீதிபதிகள் அடங்கிய அமர்வு 2017 மே 18ம் தேதி  மரண தண்டனைக்கு தடை விதித்தது. இரு நாட்டு தரப்பிலும் வழக்கு தொடர்பான தங்களது விரிவான விளக்கங்களை ஏற்கனவே நீதிமன்றத்தின் முன் சமர்பித்துள்ளன. இந்நிலையில் குல்பூஷண் ஜாதவ் வழக்கு விசாரணை சர்வதேச நீதிமன்றத்தில் நேற்று தொடங்கியது. வழக்கில் வருகிற 21ம் தேதி வரை விசாரணை நடைபெறும். இந்தியா தரப்பில் நேற்று ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதிட்டார்.  அப்போது குல்பூஷணுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் எதுவும் பாகிஸ்தானிடம் இல்லை. அதனால் அவரை விடுவிக்க வேண்டும் என்று அவர் வாதாடினார்.பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகையில், “ஜாத்வுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் நாங்கள் வைத்துள்ளோம். அவரிடம் இருந்து முஸ்லிம் பெயரில் கைப்பற்றப்பட்ட பாஸ்போர்ட் எங்களிடம் உள்ளது” என்றார். இன்று பாகிஸ்தான் தரப்பு வாதங்கள் முன் வைக்கப்படும். தொடர்ந்து 20ம் தேதி இந்தியாவும், 21ம் தேதி பாகிஸ்தானும் தனது வாதத்தை தாக்கல் செய்யும்.

மூலக்கதை