ம்ம்ம்... வேகமெடுக்கட்டும்! முதல் நாளிலேயே முடுக்கினார் கலெக்டர்...

தினமலர்  தினமலர்
ம்ம்ம்... வேகமெடுக்கட்டும்! முதல் நாளிலேயே முடுக்கினார் கலெக்டர்...

கோவை:அரசு திட்டங்கள் மக்களை சென்று சேர, அலுவலர்கள் முழு வீச்சில் பணியாற்ற வேண்டும்,'' என்று, கோவையில் நேற்று பொறுப்பேற்ற புதிய கலெக்டர் ராஜாமணி, அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.திருச்சி கலெக்டராக இருந்த ராஜாமணி, கோவையின் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட அவருக்கு, சக அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.இதன் பின் நிருபர்களிடம் கலெக்டர் ராஜாமணி கூறியதாவது:கோடைகாலம் நெருங்கி வருவதால், குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய, உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும். மத்திய அரசின் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு, கணக்கெடுப்பு நடத்தும் பணி, முழு வீச்சில் நடந்து வருகிறது. அந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.அதுபோலவே, மாநில அரசும் ஏழை, எளிய குடும்பத்தினருக்கு, 2 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்கான கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அதிலும் முழு கவனம் செலுத்தி, தகுதியான அனைவருக்கும் மானியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.கோவை மாவட்டம், தொழில், வாழ்க்கை தரம் நல்ல நிலையில் இருக்கும் மாவட்டம். இங்கு, இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கும் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண, முன்னுரிமை அளிக்கப்படும்.அனைத்து துறைகளும் முழு வீச்சில், திட்டப்பணிகள் மேற்கொள்வதை கலெக்டர் என்ற முறையில் தீவிரமாக கண்காணிப்பேன்.ஒவ்வொரு திங்கட்கிழமையும், அனைத்து அரசு துறைகளையும் ஈடுபடுத்தி, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் முறையாக நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
அதில் தரப்படும் மனுக்களுக்கு, 15 நாளில் தீர்வு காணப்படும்.அதேபோல, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலும் நான் இருப்பேன். அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்.இவ்வாறு, கலெக்டர் கூறினார்.சாட்டையை சுழற்றிய கலெக்டர்!செய்தியாளர்கள் கூட்டத்துக்குப் பின், துறை உயர் அதிகாரிகள் மத்தியில் கலெக்டர் பேசிய கலெக்டர், '
திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதத்துக்கு, எந்த காரணத்தையும் ஏற்க முடியாது' என்று, கண்டிப்பாக கூறினார்.அப்போது அவர் பேசியதாவது:* மத்திய அரசு அறிவித்துள்ள விவசாயிகளுக்கான நிதியுதவி, மாநில அரசின் ஏழைகளுக்கு மானியம் ஆகிய திட்டங்களை விரைந்து செயல்படுத்த, அலுவலர்கள் முழு வீச்சில் பணியாற்ற வேண்டும்.* கணக்கெடுப்பு, பயனாளிகள் பட்டியல் தயார் செய்தல் ஆகியவற்றில், எந்தவித தாமதமும் கூடாது; எந்த காரணத்தையும் ஏற்க முடியாது.* அரசு நலத்திட்டப்பணிகளை நிறைவேற்றுவதில் எப்போதும் ஆர்வத்துடனும், அக்கறையுடனும் செயல்பட வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.பொங்கல் விடுமுறை,
அரசு ஊழியர் ஸ்டிரைக், அதிகாரிகள் இடமாறுதல் எதிர்பார்ப்பு உள்ளிட்ட காரணங்களால், கோவை மாவட்டத்தில், இரண்டு மாதங்களாகவே, அரசு அலுவலகங்களில் பணிகள் சரிவர நடக்கவில்லை. லோக்சபா தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வருவதற்கு, இன்னும் அதிகபட்சம், 15 நாட்களே உள்ளன.அதற்குள், தகுதியானவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்கவும், முடங்கியிருந்த அரசு இயந்திரத்தை முடுக்கி விடவும் ஏற்ற வகையில், நேற்று கலெக்டரின் உத்தரவுகள் இருந்ததாக, கூட்டத்தில் பங்கேற்ற அலுவலர்கள் தெரிவித்தனர்.

மூலக்கதை