பாகிஸ்தான் தூண்டுதலில் தற்கொலை படை தாக்குதல்: குற்றம் சாட்டுகிறது ஈரான்

தினமலர்  தினமலர்
பாகிஸ்தான் தூண்டுதலில் தற்கொலை படை தாக்குதல்: குற்றம் சாட்டுகிறது ஈரான்

தெகரான்: ஈரானில் கடந்த பிப்., 13ல் 27 ஈரானிய ராணுவத் துருப்புகள் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியது. இதன் பின்னணியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் ஆதரவு இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

இஸ்பஹான் நகரில் நேற்று முன்தினம் கொல்லபட்ட ராணுவ வீரர்களின் உடல்களை ஊருக்கு கொண்டு செல்லும் பணி நடந்தது. ராணுவ வீரர்களின் இறுதிச் சடங்குகள் அவரவர் சொந்த ஊர்களில் நேற்று நடந்தது.

நேற்று முன்தினம் ஈரான் ராணுவத் தளபதி ஜெனரல் முகம்மது அலி ஜாபரி தெரிவித்ததாவது:ஈரானிய புரட்சிகர அரசுக்கு எதிரானவர்களுக்கு பாகிஸ்தான் அரசு அடைக்கலம் தந்துள்ளது. அவர்கள் எங்கே மறைந்திருக்கிறார்கள் என்பது பாகிஸ்தான் அரசுக்குத் தெரியும். அதேநேரத்தில் அவர்களை பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் ஆதரித்து வருகின்றன. அப்பயங்கரவாதிகள் அனைவரும் ஜெய்ஷ் அல்-அதுல் இயக்கத்தைச் சேர்ந்த ஜிகாதிகள் ஆவர்.ஜெய்ஷ் அல் அதுல் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் அரசு தண்டிக்கவில்லையெனில், அத்தகைய ஈரானிய எதிர்ப்பு சக்திகளான எதிர்-புரட்சிகரப் படைகளுக்கு பதிலடி கொடுப்போம். தீவிரவாத இயக்கத்திற்கு பாகிஸ்தான் துணை நிற்பதோடு, தீவிரவாதத்தைத் துாண்டி வருமானால் அதற்கான எதிர்விளைவுகளையும் விரைவில் அவர்கள் சந்திக்க வேண்டும் என்று எச்சரிக்கிறோம்''.இவ்வாறு அவர் பேசினார்.

ஜெய்ஷ் அல் அதுல் தீவிரவாத இயக்கம் 2012-ல் உருவானது. இது ஜூன்டால்லா பயங்கரவாத இயக்கத்திலிருந்து தனியே பிரிந்து வந்த இயக்கம்.தெஹ்ரானில் 2010ல் ஜூன்டால்லா இயக்கத் தலைவர் அப்துல்மாலிக் ரிக்கி துாக்கிலிடப்பட்டதை அடுத்து ஒரு நாடெங்கும் கொடூர தீவிரவாதக் கிளர்ச்சியை இவ்வியக்கம் முன்னெடுத்தது. அப்போது உருவானதுதான் ஜெய்ஷ் அல் அதுல் பயங்கரவாத இயக்கம்.

பிப்., 13ல் தென்கிழக்கு மாகாணமான சிஸ்தான்-பெலுசிஸ்தானில் சாலையில் வந்துகொண்டிருந்த பேருந்தைக் குறிவைத்து இந்த தற்கொலைப் படை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் பயணித்த 27 ஈரானிய ராணுவத்தினர் பலியாகினர்.சமீபத்திய ஆண்டுகளில் ஈரானிய பாதுகாப்புப் படைகள் மீது நடந்த மிகப்பெரிய தாக்குதல் இது.

மூலக்கதை