கிம் சந்திப்பு வெற்றிகரமானதாக இருக்கும்: டிரம்ப்

தினமலர்  தினமலர்
கிம் சந்திப்பு வெற்றிகரமானதாக இருக்கும்: டிரம்ப்

வாஷிங்டன்: வடகொரிய அதிபர் கிம் உடனான இரண்டாவது சந்திப்பு வெற்றிகரமானதாக அமையும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், வடகொரிய அதிபர் கிம்மும் இரண்டாவது முறையாக இந்த மாதம் சந்திக்க இருக்கிறார்கள்.இதுகுறித்து வெள்ளை மாளிகையில் டிரம்ப் கூறியதாவது:வடகொரிய அதிபர் கிம் உடனான இரண்டாவது சந்திப்பு வெற்றிகரமானதாக இருக்கும். எங்களது முந்தைய சந்திப்புக்குப் பிறகு இருதரப்பு உறவில் முன்னேற்றம் இருப்பதால் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட இருக்கிறோம்.நாங்கள் இருவரும் முன்னர் சந்தித்த சந்திப்பு போலவே இந்தச் சந்திப்பு நல்லபடி இருக்கும் என்று நம்புகிறேன். அந்தச் சந்திப்புக்குப் பிறகு ராக்கெட்கள் பறக்கவில்லை, ஏவுகணைகள், அணு ஆயுத சோதனைகளும் நடத்தப்படவில்லை. எங்களது பிணைக்கைதிகளும் விடுவிக்கப்பட்டனர், என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் எதிர்த்தன.ஆனால், எதிர்ப்புகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல், வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது.இந்த நிலையில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா -தென் கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து டிரம்ப் - கிம் இடையே சிங்கப்பூரில் சந்திப்பு நடந்தது.இந்தச் சந்திப்பில் அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியா சம்மதம் தெரிவித்தது. இந்த நிலையில் டிரம்ப் - கிம் இடையே இரண்டாவது சந்திப்பு நடக்கிறது.

மூலக்கதை