புல்வாமா தாக்குதல் எதிரொலி... காஷ்மீரில் 5 பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ்

தினகரன்  தினகரன்
புல்வாமா தாக்குதல் எதிரொலி... காஷ்மீரில் 5 பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ்

ஸ்ரீநகர்: காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களான மிர்வாயிஸ் உமர் பாரூக், யாசின் மாலிக் உள்ளிட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு ரத்து செய்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் துணை ராணுவ வீரர்கள் கடந்த வியாழ கிழமை 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர்.  அவர்கள் வாகனத்தின் மீது ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி வெடிகுண்டு ஏற்றிய சொகுசு காரை கொண்டு மோதி வெடிக்க செய்ததில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.  இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.  புல்வாமா தாக்குதலை தொடர்ந்து நாட்டில் நிலவிவரும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து உளவுத்துறை மற்றும் காவல்துறைகளை சேர்ந்த உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று காலை முக்கிய ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து காஷ்மீர் சென்ற உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் மற்றும் அந்நாட்டின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பிடம் இருந்து நிதி பெறுபவர்களுக்கான பாதுகாப்பு பற்றி மறு ஆய்வு செய்யப்படும் என கூறினார். இந்த நிலையில், பிரிவினைவாத தலைவர்களான மீர்வாயிஜ் உமர் பரூக், அப்துல் கனி பாட், பிலால் லோன், ஹாசிம் குரேஷி மற்றும் ஷபீர் ஷா ஆகிய 5 பேருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.  இந்த பாதுகாப்பினை திரும்ப பெற காஷ்மீர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.அவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு, வாகனங்கள், ஆகியவை மாலை முதல் திரும்ப பெற்று கொள்ளப்படும். அவர்களுக்கோ, வேறு எந்த பிரிவினைவாத தலைவர்களுக்கோ எந்த சூழ்நிலையிலும் பாதுகாப்பு வழங்கப்படாது. அரசின், வேறு எந்த சலுகையை அவர்கள் பெற்று வந்தாலும் அதுவும் உடனடியாக ரத்து செய்யப்படும். போலீஸ் பாதுகாப்பு உள்ள மற்ற பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை வாபஸ் பெறுவது குறித்து ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அதில் எனக்கூறப்பட்டு உள்ளது.

மூலக்கதை