பனியன் நகரத்தில் அடிக்கடி...நெரிசல்! சாலை கட்டமைப்பு படுமோசம்

தினமலர்  தினமலர்
பனியன் நகரத்தில் அடிக்கடி...நெரிசல்! சாலை கட்டமைப்பு படுமோசம்

திருப்பூர்:'திருப்பூர் மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, உயர்மட்ட மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை, அதிகளவில் அமைக்க வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருப்பூரில், சமீபகாலமாக போக்குவரத்து நெருக்கடி, அதிகரித்து வருகிறது. பல்லடம் ரோடு மற்றும் மங்கலம் ரோடு உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில், காலை மற்றும் மாலை நேரங்களில், வாகனங்கள் நீண்ட நேரம் 'சிக்னல்'களில் காத் திருக்கும் நிலையுள்ளது.
பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, புதிய மேம்பாலம் திறக்கப்பட்டால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்பாலத்தை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்த துவங்கவில்லை.தவிர, சர்வீஸ் ரோடு அமைக்கும் பணியும் தாமதமாகி வருவதால், நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
விரிவாக்கம் இல்லைஅதற்கேற்ப நகரில், வாகன எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது; மாறாக, ரோடு, பார்க்கிங் வசதி மேம்படுத்தப்படவில்லை. முக்கியமான இடங்களில், பல ஆண்டுகளுக்கு முன் வடிவமைக்கப்பட்டஅதே ரோடு தான் தற்போதும் பயன்பாட்டில் உள்ளன.அதே போல், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ரோடு, அவ்வப்போது பழுது பார்க்கப்படுகிறதே தவிர வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப விரிவுபடுத்தப்பட வில்லை; இதனால், நகரில் சாலை விபத்துகள் அதிகளவில் நடக்கிறது.
உத்தரவு உதாசீனம்
வணிக வளாகங்களின் தரை தளத்தில் 'பார்க்கிங்' அமைக்குமாறு உள்ளூர் திட்டக்குழுமம் சார்பில் அறிவுறுத்தப்பட்டும், அந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை.இதனால், குமரன் ரோடு, பார்க் ரோடு, பல் லடம் ரோட்டில், வளாகங்களின் முன்புள்ள பிரதான சாலைகளில் பொதுமக்கள் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு செல்வதால், ரோட்டின் பாதி இடம் 'பார்க்கிங்' தளமாக மாறி, போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. டி.கே.டி., மில், வீரபாண்டி உள்ளிட்ட இடங்களில், சிக்னல் சந்திப்புகள், பெரும்பாலும் குழப்பம் நிறைந்ததாகவே உள்ளன. இதனால் நகருக்குள் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே, நகரில், உயர்மட்ட மேம்பாலம், சுரங்கப்பாதையை அதிகளவில் அமைக்க வேண்டும் என்பதே 'தினமலர்' எதிர்பார்ப்பு.

மூலக்கதை