வீரரின் உடலை சுமந்த ராஜ்நாத்

தினமலர்  தினமலர்
வீரரின் உடலை சுமந்த ராஜ்நாத்

ஸ்ரீநகர்: காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த வீரரின் உடலை, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ராஜ்நாத் சிங், தோளில் சுமந்து சென்றார்.

ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்த, 40 வீரர்களின் உடல்களுக்கு, நேற்று இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.இதில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங், டில்லியில் இருந்து


புறப்பட்டு, ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர் சென்றார்.அங்கு, மூவர்ண கொடியால் போர்த்தப்பட்ட, 40 வீரர்களின் உடல்களுக்கு, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.பின், வீரர்களின் உடல்கள், ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு, ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.அப்போது, வீரர் ஒருவரின் உடல் வைக்கப்பட்டு இருந்த பெட்டியை, மத்திய அமைச்சர், ராஜ்நாத் சிங், கண்ணீர் மல்க, தன் தோளில் சுமந்து சென்றார். இதன் பின், ஸ்ரீநகரில் இருந்து, சிறப்பு விமானம் மூலம், உடல்கள் டில்லிக்கு அனுப்பப்பட்டன.பயங்கரவாதிகளின் தாக்குதலில், பீஹார் மாநிலம், பாகல்பூரைச் சேர்ந்த, ரத்தன் தாக்கூர் என்ற வீரரும் உயிரிழந்தார்.
மகன் இறந்த செய்தி கேள்விப்பட்டதும், ரத்தன் தாக்கூரின் தந்தை, அதிர்ச்சியில் கதறி அழுதார். அப்போது, அவரது தந்தை கூறியதாவது:நாட்டுக்காக ஒரு மகனை இழந்துவிட்டேன். மற்றொரு மகனை தியாகம் செய்யவும் தயாராக உள்ளேன். ஆனால், இந்த படுகொலையை செய்த பாகிஸ்தானுக்கு, தகுந்த பதிலடி கொடுத்தே ஆக வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை