புல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்கி 40 வீரர்கள் பலி: பாகிஸ்தானுடன் போர் மூளுமா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
புல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்கி 40 வீரர்கள் பலி: பாகிஸ்தானுடன் போர் மூளுமா?

* அனைத்து கட்சி தலைவர்களுடன் உள்துறை அமைச்சர் ஆலோசனை
* ராணுவ வாகனங்கள் செல்லும் போது மக்கள் நடமாட தடை
புதுடெல்லி: புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் பலிக்கு பதிலடியாக, பாகிஸ்தானுக்கு எதிராக போர் நடவடிக்கை எடுப்பது குறித்து, இன்றைய அனைத்து கட்சி கூட்டத்தில் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில், ராணுவ வாகனங்கள் செல்லும் போது மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாதுகாப்புப் படையினர் 2,547 பேர் ஜம்முவில் இருந்து, 78 வாகனங்களில் பள்ளத்தாக்கு பகுதிக்கு கடந்த 14ம் தேதி சென்று கொண்டிருந்த போது, நகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் அவந்திப்போரா பகுதியில் பதுங்கியிருந்த தற்கொலை படை தீவிரவாதி குண்டு நிரப்பிய காருடன் வந்து, பாதுகாப்பு படையினரின் வாகனத்தில் மோதி வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இந்த கொடூர வெடிவிபத்தில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பரிதாபமாக இறந்தனர்.

மேலும், 20 வீரர்கள் படுகாயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை நிறைவேற்றிய அடில் அகமது என்பவன், ஜெய்ஷ்இ முகமது என்ற தீவிரவாத அமைப்பின் சி பிரிவைச் சேர்ந்தவன்.



இந்தியாவுக்கு எதிராக நடந்த இந்த தீவிரவாத தாக்குதலை உலக நாடுகள் பல கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ‘தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்’ என்றும் சமூக வலைத்தளங்களில் மக்கள் கோபத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 7 பேரை பிடித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு 80 கிலோ எடையிலான சக்திவாய்ந்த ஆர்டிஎக்ஸ் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், ஒட்டுமொத்த திட்டங்களை தீட்டியது பாகிஸ்தானைச் சேர்ந்த கம்ரான் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், ஜம்முவின் டிரால் பகுதியில் உள்ள மிடூரா என்ற இடத்தில் வைத்து தாக்குதலுக்கான திட்டம் தீட்டப்பட்ட நிலையில், அவந்திப்போராவில் தாக்கல் நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் புலனாய்வு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று குண்டுவெடிப்பில் இறந்த சிஆர்பிஎப் வீரர்களின் உடல்கள் டில்லி பாலம் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முப்படை தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

வீரர்களின் உடல்கள் தனி விமானங்கள் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு நேற்றிரவு முதல் எடுத்துச் செல்லும் பணிகள் நடைபெற்றன. அதன்படி, தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகில் உள்ள சவாலாப்பேரியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன், அரியலூரைச் சேர்ந்த சிவசந்திரன், கேரளாவைச் சேர்ந்த வசந்தகுமார் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த வீரர் என 4 பேரின் உடல்கள் இன்று திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இந்நிலையில், மத்திய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. நாடாளுமன்ற நூலகத்தில் வைத்து இன்று காலை 11 மணியளவில் இந்த கூட்டம் நடந்தது.

அனைத்துக்கட்சி பிரதிநிதிகளிடம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தீவிரவாத தாக்குதல் பற்றியும், காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு சூழல் பற்றியும் விளக்கமளித்தார்.

அதனால், பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியாவின் தரப்பில் கடுமையான நடவடிக்கை அல்லது போர் தொடுக்கும் அளவிற்கு, அந்நாட்டிற்கு சேதத்தை ஏற்படுத்த ஆலோசிக்கப்பட்டுள்ளதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுைகயில், “ஜம்மு - காஷ்மீரின் முக்கிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலையில் ராணுவ வாகனங்களின் ‘கான்வாய்’ செல்லும் போது, அங்கு மக்கள் நடமாட்டத்திற்கு இனி அனுமதி அளிக்கப்பட மாட்டாது.

மேலும், பாகிஸ்தானைச் சேர்ந்த உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மூலம் நிதியுதவி பெற்று சில பிரிவுகள் ஜம்மு காஷ்மீரில் இயங்குகின்றன. அவர்களுக்கு எதிரான தீர்க்கமான போரில் நாம் வெற்றிப் பெறுவோம்” என்றார்.



நாடு முழுவதும் போராட்டம்:
புல்வாமா தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் மக்கள் வீதிக்கு வந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியர் சில நிமிடங்கள் மெழுவர்த்தி ஏந்தி வீரர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

டெல்லியில் நடந்த போராட்டத்தில் பாகிஸ்தான் நாட்டின் கொடி எரிக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. அதேபோல், லக்னோ, அகமதாபாத், ஐதராபாத், ஜம்முவின் குஜார் நகர், மும்பை, பாட்னா, பஞ்சாப் உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்கள், வன்முறை சம்பவங்களும் நடப்பதால், சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் 4 சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சவுதி இளவரசர் பயணம் ரத்து
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அடுத்த வாரம் சீனாவுக்கு அரசியல் ரீதியாக சுற்றுப் பயணம் செல்ல உள்ளார். முன்னதாக பாகிஸ்தான், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு சவுதி இளவரசர் பயணம் மேற்கொள்ள திட்டம் வகுக்கப்பட்டது.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா தாக்குதல் சம்பவத்தால், சவுதி இளவரசரின் பாகிஸ்தான் பயணம் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை