கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர், அமைச்சர்கள் 4வது நாளாக தர்ணா: தொடர் போராட்டம் அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர், அமைச்சர்கள் 4வது நாளாக தர்ணா: தொடர் போராட்டம் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் இன்று 4வது நாளாக தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ்- திமுக அரசின் அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் செயல்படுத்த விடாமல் கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து முட்டுக்கட்டை போடுவதை கண்டித்து கடந்த 13ம்தேதி முதல் முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ராஜ்நிவாஸ் முன்பு தர்ணாவை தொடங்கினர்.

கவர்னர் பேச்சுவார்த்தை நடத்தாமல் டெல்லிக்கு சென்றுவிட்ட நிலையில் அவர்களது போராட்டம் நேற்று 3வது நாளாக தொடர்ந்தது. போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்து நேற்று மாலை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்வர் நாராயணசாமி நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்னர் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது: மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றும் வரை, தர்ணா போராட்டம் தொடரும். காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி சார்பில் உண்ணாவிரதம், சிறை நிரப்பும் போராட்டம் என போராட்டம் தீவிரப்படுத்தப்பட உள்ளது.

வரும் 21ம்தேதி பேச்சுவார்த்தையை வைத்துக் கொள்ளலாம் எனக் கூறிவிட்டு டெல்லி சென்ற கிரண்பேடிக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நாளை (இன்று) மாலை 12 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். நாளை மறுநாள் (17ம்தேதி) 30 தொகுதிகளில் கருப்பு கொடி ஏற்றப்படும்.

18ம்தேதி கிரண்பேடியை கண்டித்து ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு இமெயில் மற்றும் அஞ்சல் வழியாக கடிதம் அனுப்பும் போராட்டம் நடக்கவுள்ளது. 20ம்தேதி 12 மையங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற உள்ளது.

21ம்தேதி மாபெரும் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. கவர்னர் மாளிகை முன்பு நடக்கும் தர்ணாவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் தோழமை கட்சி தலைவர்கள் தொடர்ந்து பங்கேற்பார்கள்.

இவ்வாறு  அவர் கூறினார். கவர்னருக்கு எதிராக புதுச்சேரியில் ஆளுங்கட்சி மற்றும் மதச்சார்பற்ற அணிகள் ஒன்றிணைந்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருவதால் புதுச்சேரி போராட்டகளமாக மாறியுள்ளது.



டெல்லி சென்றிருக்கும் கிரண்பேடி 20ம்தேதி புதுச்சேரி திரும்புகிறார். அதற்கு மறுநாள் முதல்வர், அமைச்சர்களை சந்திப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகே போராட்டம் முடிவுக்கு வருமா அல்லது மேலும் தீவிரமாகுமா? என்பது தெரியவரும். இந்த நிலையில் ராஜ்நிவாஸ் முன்பு இன்று முதல்வரின் தர்ணா 4வது நாளாக தொடர்ந்தது.

அவருடன் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டனர். போராட்டம் காரணமாக ராஜ்நிவாசை சுற்றிலும் வழக்கம்போல் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன.

புதுச்சேரி காவல்துறையுடன் இணைந்து மத்திய துணை ராணுவப் படையினர் தடுப்பு கட்டைகள் முன்பு திரண்டு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


.

மூலக்கதை