டெல்லி - வாரணாசி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர்: 160 கிமீ வேகத்தில் செல்லக் கூடியது

தினகரன்  தினகரன்
டெல்லி  வாரணாசி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர்: 160 கிமீ வேகத்தில் செல்லக் கூடியது

புதுடெல்லி: அதிக வேகத்தில் செல்லக்கூடிய ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ ரயிலின் சேவையை டெல்லி-வாரணாசி இடையே பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை ஐசிஎப்.பில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் தனியாக இன்ஜின் இல்லாமல், ரயில் பெட்டிகளிலேயே இணைக்கப்பட்ட இன்ஜினுடன் அதிநவீன ரயில் தயாரிக்கப்பட்டது. ‘ரயில் 18’ என அழைக்கப்பட்ட இந்த ரயிலுக்கு பிரதமர் மோடி ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் என பெயர் சூட்டினார்.  முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை தொடக்க விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட  பிரதமர் நரேந்திர மோடி, கொடி அசைத்து ரயில் சேவையை தொடங்கி வைத்தார். பின்னர் விழாவில் பேசிய அவர், “டெல்லி-வாரணாசி இடையே முதல் சேவையை தொடங்கும் வந்தே பாரத் ரயிலின் பின்னணியில் உள்ள வடிவமைப்பாளர்கள்,  பொறியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நமது நேர்மை, கடுமையான முயற்சியால் கடந்த 4.5 ஆண்டுகளாக ரயில்வே துறையை முன்னேற்றப் பாதைக்கு எடுத்து சென்றுள்ளோம்” என்றார்.  ரயிலை பார்வையிட்ட பிரதமர், ‘‘18 மாதங்களில் சென்னையில் உருவாக்கப்பட்ட இந்த ரயிலை பார்த்து பெருமை கொள்கிறேன்’’ என்றார். இந்த ரயில் மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும். டெல்லியில் இருந்து வாரணாசிக்கு 9 மணி நேரம், 45 நிமிடங்களில் சென்றடையும். வர்த்தக ரீதியாக நாளை முதல் டெல்லியில் இருந்து இந்த ரயில் தனது சேவை தொடங்கும். இதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்கப்பட்டு விட்டன. இந்த ரயில் வாரத்துக்கு  5 நாட்கள் இயக்கப்படும். 18 பெட்டிகளில் 16 பெட்டிகள் குளிர்சாதன வசதி கொண்டவை. மொத்தம் 1,128 பேர் பயணம் செய்யலாம். அனைத்து பெட்டிகளிலும் தானியங்கி கதவுகள், பிரத்யேக இருக்கை வசதி, நவீன கழிவறை, ஒவ்வொரு பெட்டியிலும் உணவு கூடம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

மூலக்கதை