வெளிநாடு செல்ல உத்தரவாதமாக செலுத்தும் 10 கோடிக்கு வட்டி கேட்ட கார்த்தி சிதம்பரம் மனு தள்ளுபடி

தினகரன்  தினகரன்
வெளிநாடு செல்ல உத்தரவாதமாக செலுத்தும் 10 கோடிக்கு வட்டி கேட்ட கார்த்தி சிதம்பரம் மனு தள்ளுபடி

புதுடெல்லி: ‘வெளிநாடு செல்வதற்கு பிணையாக செலுத்தப்படும் 10 கோடி உத்தரவாத  தொகைக்கு வட்டி அளிக்க வேண்டும்’ என்ற கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு மற்றும் ஏர்செல் மேக்சிஸ் வழக்குகளில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் கலந்து கொள்ள வெளிநாடுகள் செல்லஅனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு செய்திருந்தார். இதற்கு ரூ.10 கோடியை உத்தரவாத தொகையாக டெபாசிட் செய்யும் படி உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் கார்த்தி சிதம்பரம் சார்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘உத்தரவாத தொகையான 10 கோடியை வட்டியுடன் கூடிய குறுகிய கால டெபாசிட்டாக வைத்து, 3 மாதத்துக்கு பின் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என கோரப்பட்டது. இதை நிராகரித்த நீதிபதிகள், ‘‘இது போன்ற நிபந்தனைகளை போட்டால், அடுத்த முறை வெளிநாடு செல்ல அனுமதி கேட்கும்போது நாங்கள் அது பற்றி யோசிக்க வேண்டியிருக்கும்’’ என எச்சரித்தனர்.

மூலக்கதை