இதர இந்தியா 374/3 டிக்ளேர் விதர்பாவுக்கு 280 ரன் இலக்கு

தினகரன்  தினகரன்
இதர இந்தியா 374/3 டிக்ளேர் விதர்பாவுக்கு 280 ரன் இலக்கு

நாக்பூர்: இந்திர இந்திய அணியுடனான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில், ரஞ்சி சாம்பியன் விதர்பா அணிக்கு 280 ரன் இலக்கு நிர்ணயிகப்பட்டுள்ளது. நாக்பூர், விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த இதர இந்திய அணி (ரெஸ்ட் ஆப் இந்தியா) 330 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய விதர்பா முதல் இன்னிங்சில் 425 ரன் குவித்து ஆட்டமிழந்தது. சஞ்சய் 65, கணேஷ் சதீஷ் 48, அக்‌ஷய் வாத்கர் 73, அக்‌ஷய் கர்னிவார் 102 ரன் விளாசினர். இதர இந்தியா பந்துவீச்சில் சாஹர் 4, ராஜ்பூட், கவுதம், தர்மேந்திரசிங் ஜடேஜா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 95 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இதர இந்தியா 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 102 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த 4வது நாள் ஆட்டத்தில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 374 ரன் என்ற ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது. கேப்டன் அஜிங்க்யா ரகானே 87 ரன் (232 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். ஹனுமா விஹாரி - ரகானே ஜோடி 3வது விக்கெட்டுக்கு 229 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.விஹாரி 180 ரன் (300 பந்து, 19 பவுண்டரி, 4 சிக்சர்), ஷ்ரேயாஸ் அய்யர் 61 ரன்னுடன் (62 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து, 280 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விதர்பா அணி களமிறங்கியது. கேப்டன் பைஸ் பஸல், சஞ்சய் ரகுநாத் இருவரும் துரத்தலஒ தொடங்கினர். ராஜ்பூட் வீசிய முதல் ஓவரின் 3வது பந்திலேயே பஸல் டக் அவுட்டாகி வெளிடேறினார். நான்காம் நாள் ஆட்ட முடிவில் விதர்பா அணி 2வது இன்னிங்சில் 1 விக்கெட் இழப்புக்கு 37 ரன் எடுத்துள்ளது. சஞ்சய் 17 ரன், அதர்வா டெய்டே 16 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 9 விக்கெட் இருக்க, விதர்பா வெற்றிக்கு இன்னும் 243 ரன் தேவை என்ற நிலையில் இன்று பரபரப்பான கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

மூலக்கதை