புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா...ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவனை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க மறுப்பு!

தினகரன்  தினகரன்
புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா...ஜெய்ஷ்இமுகமது இயக்கத்தின் தலைவனை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க மறுப்பு!

பெய்ஜிங்: புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா, ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவனை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க மறுப்பு தெரிவித்துள்ளது. ஜம்முவில் செயல்பட்டு வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 2,500 வீரர்கள், ஜம்முவில் இருந்து ஸ்ரீநகரை நோக்கி 78 பேருந்துகளில் நேற்று சென்று கொண்டிருந்தனர். புல்வாமா மாவட்டத்தில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் அவந்திபோரா அருகே வீரர்களின் வாகனங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது. இந்த கொடூர சம்பவத்தில் 44 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் கொடூரமான தீவிரவாத தாக்குதலை ராணுவத்தினர் நேற்று எதிர்கொண்டனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் உடனடியாக கண்டனம் தெரிவித்த நிலையில் சீனாவும், பாகிஸ்தானும் மட்டும் அமைதி காத்து வந்தன. இந்த நிலையில், சீனாவும் தமது கண்டனத்தை இன்று பதிவு செய்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீனா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கெங்க் சுவாங், இந்தியாவில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதல் குறித்து சீனாவின் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த தாக்குதலால் நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம் என்று கூறியுள்ளார். மேலும், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கும், காயமடைந்தோருக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம். எந்த தீவிரவாதம் வகையில் வந்தாலும் அதை கடுமையாக கண்டிக்கிறோம். இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் உறுதி செய்வதற்கு சம்பந்தப்பட்ட நாடுகள் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார். இந்நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் என்பவனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டுமென்ற இந்தியாவின் கோரிக்கை குறித்து நிரூபர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த கெங்க் சுவாங், ஏற்கனவே ஜெய்ஷ்-இ-முகமது, ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலால் தடை செய்யப்பட்ட, தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் உள்ளது. அதைத்தான் சீனா பின்பற்றும் என்று தெரிவித்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தமக்குள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, இந்தியாவின் இக்கோரிக்கைக்கு சீனா தொடர்ந்து முட்டுகட்டை போட்டு வருகிவது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை