40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு அதிகாரம்: தீவிரவாதிகளை வேரறுக்க மோடி அதிரடி உத்தரவு

தினகரன்  தினகரன்
40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு அதிகாரம்: தீவிரவாதிகளை வேரறுக்க மோடி அதிரடி உத்தரவு

* பாகிஸ்தானுக்கு அளித்த வர்த்தக சலுகைகள் ரத்து* தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த  சுப்பிரமணி, அரியலூர்  மாவட்டத்தை சேர்ந்த சிவச்சந்திரன் என்ற 2 வீரர்கள்  பலியாகினர். * தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற  தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.* காஷ்மீர் மாநிலம், புல்வாமா  மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள்  2,500 பேர் நேற்று முன்தினம் 78 பேருந்துகளில் சென்றனர்.* வெடிகுண்டுகள்  நிரப்பிய வாகனத்தில் வந்த அகமது என்ற தீவிரவாதி, வீரர்கள் வாகனம்  மீது மோதி தற்கொலை படை  தாக்குதல் நடத்தினான். * ஒரு பேருந்தின் மீது அவன் மோதியதில், பேருந்து  வெடித்து சிதறி 40 வீரர்கள் பலியாகினர். 20க்கும் மேற்பட்ட வீரர்கள்  படுகாயம் அடைந்தனர்.புதுடெல்லி: காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்க, ராணுவத்துக்கு முழு அதிகாரம் வழங்கி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும், தீவிரவாதிகளை வேரறுக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதோடு, தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு கொடுத்து வரும் பாகிஸ்தானுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டுக்கு இந்தியா வழங்கி வந்த ‘வர்த்தக நட்பு நாடு’ அந்தஸ்தை மத்திய அரசு பறித்துள்ளது. காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு-நகர் தேசிய நெடுஞ்சாலையில் சிஆர்பிஎப் வீரர்கள் 2,500 பேர் நேற்று முன்தினம் 78 பேருந்துகளில் சென்றபோது, வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தில் வந்த அதில் அகமது என்ற தீவிரவாதி தற்கொலை படை தாக்குதல் நடத்தினான். ஒரு பேருந்தின் மீது அவன் மோதியதில், பேருந்து வெடித்து சிதறி 40 வீரர்கள் பலியாகினர். 20க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி, அரியலூர்  மாவட்டத்தை சேர்ந்த சிவச்சந்திரன் என்ற 2 வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த கொடூர தாக்குதலால் நாடு முழுவதும் மக்கள் கொந்தளித்துள்ளனர். தாக்குதல் சம்பவத்துக்கு இந்திய மற்றும் உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில்  நேற்றுக்காலை அவசரமாக கூட்டப்பட்டது. இதில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, உள்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாதுகாப்புத்துறை  அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத அமைப்புகளை தொடர்ந்து தூண்டி விட்டும், ஆதரவு அளி்த்தும் வரும் பாகிஸ்தானை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுப்பது  குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டத்துக்குப் பிறகு நிதியமைச்சர் அருண்  ஜெட்லி அளித்த பேட்டியில், “தீவிரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும்படி உலக  நாடுகளை வலியுறுத்தும் வகையில், பாகிஸ்தானுக்கு எதிராக அனைத்து விதமான  நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு  அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கடந்த 1996ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட  “வர்த்தக நட்பு நாடு” அந்தஸ்து திரும்ப பெறப்படுகிறது. இதன் மூலம் வர்த்தக  ரீதியிலான அனைத்து உறவுகளும் தடைபடும்” என்று கூறினார். இந்நிலையில், டெல்லியில் ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவையை கொடியசைத்து  தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, “புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின்  தியாகம் வீண் போகாது. இந்திய மக்களின் ரத்தம் கொதிக்கிறது. தீவிரவாதிகள் தாங்கள் நடத்திய  தாக்குதலுக்கு உரிய விலையை கொடுத்தே தீர வேண்டும். உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நமது அண்டை நாடு, தாக்குதலின் மூலம் நம் நாட்டை  சீர்குலைக்கலாம் என்று திட்டமிட்டது. ஆனால், அது வெற்றி பெறவில்லை. இந்த தாக்குதலுக்கு பின்னால் இருந்து செயல்பட்டவர்கள்  நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்” என்று எச்சரித்தார். பின்னர், உத்தர பிரதேச மாநிலம், பந்தல்கண்டில்  ராணுவ திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிய பின்னர் மோடி பேசுகையில், ‘‘நம் நாட்டின் வளர்ச்சியை பார்த்து அண்டை நாடு மிரள்கிறது. அதனால், விரக்தியை வெளிப்படுத்துகிறது. கடுமையான பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டின் பொருளாதார  நிலை மிகவும் சீரழிந்து, தங்களின் அன்றாட செலவுக்கு கையில் பிச்சைப்  பாத்திரத்துடன் உலக நாடுகளிடம் கையேந்துகிறது. அவர்களின் நாட்டை போன்று நமது நாட்டையும் சீரழித்து விடலாம் என்ற கனவுடன்  புல்வாமா தாக்குதல்  நடத்தப்பட்டுள்ளது. இந்த  தாக்குதலில் இன்னுயிரை  நீத்த நமது வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீணாகாது. 40 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பதிலடி கொடுக்க நமது ராணுவத்துககு  முழு அதிகாரமும், சுதந்திரமும் அளிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில்,  எங்கு, எப்போது, எப்படி தாக்குதல் நடத்துவது என்பதை பாதுகாப்புப் படையினரே  தீர்மானிக்கலாம்; முடிவு செய்யலாம். இது புதிய கொள்கைகள் உடைய புதிய  இந்தியா’’ என்றார். இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை மத்தி அரசு எடுத்துள்ளது. முதல் கட்டமாக, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் ஷோகெய்ல் முகமதுவுக்கு சம்மன் அனுப்பி  வரவழைத்த இந்திய வெளியுறவு செயலர் விஜய் கோகலே, இந்தியா தரப்பில் கடும்  கண்டனம் தெரிவித்தார். அதேபோல், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் அஜய்  பிசாரியாவும் உடனடியாக நாடு திரும்பும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு இந்தியா அளித்து வந்த ‘வர்த்தக நட்பு நாடு’ அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.அனைத்து கட்சி கூட்டம்புல்வாமா தாக்குதல் குறித்து விளக்குவதற்காக டெல்லியில் இன்று அனைத்து கட்சிகள் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது. இதில் பங்கேற்கும்படி காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளையும் சேர்ந்த தலைவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைத்து விடுத்துள்ளார். இதில், இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது பற்றி ஆலோசனை கேட்கப்பட உள்ளது. மேலும், இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும் தலைவர்களுக்கு விளக்கப்பட உள்ளது.

மூலக்கதை