மூளைச்சாவு அடைந்த மனைவியின் இதயத்தை காதலர் தினத்தில் தானமாக வழங்கிய கணவர்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
மூளைச்சாவு அடைந்த மனைவியின் இதயத்தை காதலர் தினத்தில் தானமாக வழங்கிய கணவர்!

மூளைச்சாவு அடைந்த தனது மனைவியின் இதயத்தை காதலர் தினத்தில் தானமாக வழங்க கணவர் முன்வந்தது அனைவரது உள்ளங்களையும் உருக்கியது.

பிப்.14 உலக காதலர் தினத்தை காதலர்கள் உச்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தங்களுடைய அன்பின் வெளிப்பாடாக பூச்செண்டு  உள்ளிட்ட பரிசுப் பொருட்களை ஒருவருக்கொருவர் வழங்கி மகிழ்ந்து வருகின்றனர். 

இந்த நிலையில் வேலூரில் மூளைச்சாவு அடைந்த தனது மனைவியில் இதயம் உள்ளிட்ட 5 உறுப்புகளை தானமாக வழங்க வேலூரை சேர்ந்த கவுதம்ராஜ் என்பவர் முன்வந்தது அனைவரது உள்ளங்களையும் உருக்கியது.

சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி கிராமத்தை சேர்ந்தவர கவுதம்ராஜ். பெங்களூரு ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கோகிலா, இவர்களுக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடைபெற்றது. 

தற்போது கோகிலா கர்ப்பமாக இருந்து வந்துள்ளார் ஆனால் அவரை பரிசோதனை செய்த போது உடலில் ரத்த அணுக்கள் குறைவாக உள்ளது தெரிய வந்தது. இந்த நிலையில் அவர் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள  சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு ஒரு வாரத்திற்கு முன்பு அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. இருப்பினும் தாய் கோகிலாவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 

இந்த நிலையில் அவரைப் பரிசோதனை செய்த போது அவர் மூளைச்சாவு அடைந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த கணவர் கவுதம்ராஜ் மற்றும் உறவினர்கள், சோகத்தில் ஆழ்ந்தனர். 

ஆனாலும் கவுதம்ராஜ் மனதை ஒருநிலைப்படுத்தி தனது மனைவியின் உடல் உறுப்புகளை பிப்.14 காதலர் தினம் என்பதால் அதனை தானமாக வழங்க வேண்டும் என்று மருத்துவர்களிடம் தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தினார். 

அதிலும் குறிப்பாக காதலர் தினத்தன்று தன்னுடைய மனைவியின் இதயத்தை மற்றொரு இதயம் செயல்பாடு பாதிக்கப்பட்டவருக்கு பொருத்த வேண்டும் என்று கவுதம்ராஜ் மருத்துவர்களிடம் தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து கோகிலாவின் உடல் உறுப்புகள் இதயம், நுரையீரல், கணையம், உள்ளிட்ட 5 உடல் உறுப்புகளை தானமாக செய்ய உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து கோகிலாவின் உடல் உறுப்புகளை சட்டத்திற்கு உட்பட்டு அவை அறுவைச் சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்துவதற்கான அறுவை சிகிச்சை வேலூரில் நடைபெற்று வருகிறது. 
காதலர் தினத்தன்று மூளைச்சாவு அடைந்த மனைவியின் இதயத்தையே தானமாக வழங்க முன்வந்த கவுதம்ராஜை பலரும் பாராட்டுகின்றனர். அதே நேரத்தில் மனைவியை இழந்து வாழும் அவரைத் தேற்றவும் மற்றவர்கள் தவறவில்லை. 

மூலக்கதை