குறு, சிறு நிறுவனங்களுக்கு சலுகை நீட்டிப்பு:மத்திய அரசு ரூ.2,900 கோடி ஒதுக்கீடு

தினமலர்  தினமலர்
குறு, சிறு நிறுவனங்களுக்கு சலுகை நீட்டிப்பு:மத்திய அரசு ரூ.2,900 கோடி ஒதுக்கீடு

திருப்பூர்:குறு, சிறு நிறுவனங்களுக்கான சலுகை திட்டங்கள் மீண்டும் தொடர, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், இத்துறையினர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


குறு, சிறு நிறுவனங்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில், இயந்திரம் கொள்முதல் தொகையில், 15 சதவீத மானியம், ‘லீன்’ பயிற்சி திட்டம், ‘டிஜிட்டல் மார்க்கெட்டிங்’ மானியம், காப்புரிமை, தரச்சான்று மானியம் என, பல்வேறு சலுகை திட்டங்கள் உள்ளன.இந்த சலுகைகளுக்கான கால வரம்பு, 2017 மார்ச்சுடன் முடிந்தது.


எனவே, சலுகை திட்டங்களை மீண்டும் செயல்படுத்தக் கோரி, திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு, மத்திய அரசை வலியுறுத்தி வந்தது. இதுகுறித்து, சமீபத்தில் திருப்பூர் வந்த, பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.இதையடுத்து, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் குறு, சிறு நிறுவனங்களுக்கு மீண்டும் சலுகை திட்டம் தொடர அனுமதி அளித்து, 2,900 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இது குறித்து, தொழில் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர், அண்ணாதுரை கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் ஆடை உற்பத்தி, கறிக்கோழி வளர்ப்பு, விசைத்தறி, கொப்பரை உற்பத்தி என, 34 ஆயிரம் குறு, சிறு நிறுவனங்கள் உள்ளன.எங்கள் கோரிக்கையை ஏற்று, குறு, சிறு நிறுவனங்களுக்கான சலுகை திட்டங்கள் தொடர, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை