ஜோ ரூட்டிடம் தவறாக பேசியது குறித்து ஷனோன் கேப்ரியல் விளக்கம்!

PARIS TAMIL  PARIS TAMIL
ஜோ ரூட்டிடம் தவறாக பேசியது குறித்து ஷனோன் கேப்ரியல் விளக்கம்!

 

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென் லூசியாவில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணித் தலைவர ஜோ ரூட்டை தன்பாலின உறவை விமர்சிக்கும் வகையில் பேசியதால், விண்டிஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷனோன் கேப்ரியலுக்கு 4 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து வேகப்பந்து வீச்சாளரான ஷனோன் கேப்ரியல் ஊடகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறிய கருத்துக்கள் இவை,
 
“நான் பயன்படுத்தியது மோசமான வார்த்தை என்பதை அறிந்து மிகவும் வருந்தினேன். உணர்ச்சி வேகத்தில் நடந்த சம்பவம் இது. இருவரிடையே நடந்த வார்த்தை பரிமாற்றம் என்ன என்பதை விளக்க வேண்டியது எனது கடமை.
 
இங்கிலாந்து அணித்தவைவர் ஜோ ரூட், நான் பந்து வீச தயாரான போது என்னை உற்று பார்த்தார். இது உளவியல் சார்ந்த யுக்தியாக இருக்கலாம். டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு இது வழக்கமானது தான். இதை அறிந்த நான் எனக்குள் இருந்த பதற்றத்தைக் குறைத்துக் கொள்வதற்காக அவரை நோக்கி ‘என்னை பார்த்து ஏன் சிரித்துக் கொண்டு இருக்கிறீர்கள்? ஆண்கள் என்றால் உங்களுக்கு இஷ்டமா?’ என்று கேட்டேன்.
 
அதற்கு அவர், ‘இந்த சொல்லை ஒருவரை அவமதிப்பதற்காக பயன்படுத்தாதே. ஓரின சேர்க்கையாளராக இருப்பதில் தவறு ஒன்றும் இல்லையே’ என்று பதில் அளித்தார்.
 
அதற்கு நான் ‘அது பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் என்னை பார்த்து சிரிப்பதை நிறுத்துங்கள்’ என்று கூறினேன்.
இந்த பிரச்சினைக்கு பிறகு நாங்கள் இருவரும் சந்தித்து பேசினோம். எங்களுக்குள் எந்த கருத்துவேறுபாடும் இல்லை. ஆனால் இந்த விவகாரம் இவ்வளவு பெரிதாகும் என்று எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு ஒரு அனுபவ பாடமாகும்” என கூறினார்.
 
இச்சம்வபத்தின் போது, கேப்ரியலுக்கு மைதானத்தில் வைத்து கள நடுவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தாலும், ஐ.சி.சி இன் நடத்தை விதிகளின் 2.13 சரத்தின் கீழ் ஷனோன் கேப்ரியலுக்கு எதிராக நடுவர்கள் போட்டியின் பிறகு குற்றச்சாட்டுக்களை பதிவு செய்துள்ளனர்.
 
சர்வதேச போட்டியொன்றின் போது வீரர், போட்டி மத்தியஸ்தர் மற்றும் கள நடுவர்களை தனிப்பட்ட முறையில் தகாத வார்த்தைகளால் திட்டுவதும், விமர்சிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
 
ஒருவேளை விக்கெட் மைக்கில், ஷனோன் கேப்ரியலின் பேச்சு பதிவாகியிருந்தால் ஐசிசி இன் ஒழுங்கு நடவடிக்கைக்கு கேப்ரியல் ஆளாகியிருப்பார். எனினும் கள நடுவர்களின் முறைப்பாட்டுக்கு அமைய போட்டி மத்தியஸ்தர் ஜெப் குரோவ் விசாரணைகளை முன்னெடுத்திருந்தார்.
 
இதன் அடிப்படையில், ஷனோன் கேப்ரியலுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 75 சதவீதத்தை அபராதமாக விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், ஐ.சி.சி இன் வீரர்களுக்கான ஒழுக்க விதிமுறைகளின்படி பிரிவு – 2 ஐ மீறிய குற்றச்சாட்டில் 3 தகுதியிழப்பு புள்ளிகளுடன் மொத்தமாக 8 புள்ளிகளும் வழங்கப்பட்டது. இதன்படி, எதிர்காலத்தில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட், 4 ஒருநாள் அல்லது ரி-20 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்ப்டும்.
 
இந்த நிலையில், அடுத்த வாரம் பார்படோஸில் ஆரம்பமாகவுள்ள ஒருநாள் தொடரிற்கான விண்டிஸ் அணியில் இடம்பெற்ற 30 வயதான ஷனோன் கேப்ரியலுக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 4 ஒருநாள் போட்டிகளிலும் விளையாட முடியாது.
இது இவ்வாறிருக்க, இதற்கு முன் நடைபெற்ற இரண்டு முக்கிய சம்பவங்களில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஷனோன் கேப்ரியல் 5 தகுதியிழப்பு புள்ளிகளைப் பெற்றிருந்தார்.
 
இதில் 2017 இல் பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அதன் தலைவர் சப்ராஸ் அஹமட்டுடன் இடம்பெற்ற வாக்குவாதம் மற்றும் கடந்த வருடம் பங்களாதேஷில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அந்த அணி வீரர் இம்ருல் கைஸுடன் இடம்பெற்ற வாக்குவாதம் ஆகிய சம்பவங்களுக்கு எதிராக ஐ.சி.சி இனால் ஷனோன் கேப்ரியலுக்கு தகுதியிழப்பு புள்ளிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

மூலக்கதை