பணியாளர் அலட்சியத்தால் பெருகும் கணினி மோசடி:‘எர்னஸ்ட் யங்’ நிறுவனம் ஆய்வறிக்கை

தினமலர்  தினமலர்
பணியாளர் அலட்சியத்தால் பெருகும் கணினி மோசடி:‘எர்னஸ்ட் யங்’ நிறுவனம் ஆய்வறிக்கை

புதுடில்லி:பணியாளர்களின் அலட்சியம் காரணமாகவே, நிறுவனங்களின் கணினி ஒருங்கிணைப்பில் அத்துமீறி நுழைந்து, தகவல்களை திருடுவது உள்ளிட்ட, ‘சைபர்’ குற்றங்கள் பெருக காரணம் என, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.


இது குறித்து, ‘எர்னஸ்ட் யங்’ நிறுவனம் வெளியிட்டுள்ள, தகவல் பாதுகாப்பு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவில், அரசு நிறுவனங்கள் மற்றும் நுகர்பொருட்கள், சில்லரை விற்பனை, வங்கி, சுகாதாரம், வாகனம், ஊடகம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த, 230 நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளிடம், கணினி தகவல் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அதில், ஊழியர்களின் அலட்சியம் அல்லது விழிப்புணர்வின்மை காரணமாக, கடந்த ஓராண்டில், கணினி தகவல் பாதிப்பிற்கு ஆளானதாக, 32 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.


கூடுதல் தொகை


தொழில்நுட்பம் மற்றும் தொலை தொடர்பு துறையில் முறையே, 87 சதவீதம் மற்றும், 70 சதவீதம் பேர், அக்கறையற்ற ஊழியர்களால், வாடிக்கையாளர் தகவல்கள் திருடு போக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.


கணினியில் நவீன பாதுகாப்பு அம்சங்களை புகுத்தாமல் உள்ளதால் பாதிப்பு ஏற்படுவதாக, 21 சதவீதம் பேர் கூறினர். அதிகாரபூர்வமற்ற பயன்பாடு காரணமாக தகவல் திருடு போவதாக, 19 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.மேகக் கணினி தொழில் நுட்பம், ஸ்மார்ட் போன், சமூக வலைதளங்கள் மூலம் பாதிப்பு ஏற்படுவதாக, தலா, 8 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.


கணினி தகவல் பாதுகாப்பை பலப்படுத்த, கூடுதல் தொகை ஒதுக்க உள்ளதாக, 70 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இந்தியாவுக்கு மூன்றாவது இடம்


கடந்த, 2017ல், அதிக அளவில் கணினி தாக்குதல் நடைபெற்ற நாடுகளில், அமெரிக்கா, சீனாவை அடுத்து, இந்தியா உள்ளதுஇந்தியாவில், 2018, ஜனவரி – ஜூன் வரையிலான ஆறு மாதங்களில், 6.95 லட்சம் கணினி சார்ந்த குற்றங்கள் நடைபெற்றுள்ளன.

மூலக்கதை