வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணத்திற்கு கட்டுப்பாடு விதிக்கும் மசோதா மாநிலங்களவையில் தாக்கல்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணத்திற்கு கட்டுப்பாடு விதிக்கும் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு வெளிநாடு வாழ் இந்தியர்கள், திருமணத்திற்குப் பிறகு கொடுமைப்படுத்தியதாக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான பெண்கள் வழக்கு தொடர்ந்தனர்.

மேலும் இது தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளில், வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு சுமார் 4,300 புகார்கள் வந்துள்ளதாக தகவல் வெளியானது. இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் திருமணங்களில் கட்டுப்பாடுகள் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது.

இந்த நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணத்திற்கு கட்டுப்பாடு விதிக்கும் புதிய மசோதாவை மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவின்படி வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய பெண்ணை திருமணம் செய்தால் திருமணமாகி 30 நாட்களுக்குள் அதனை பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் அவர்களின் பாஸ்போர்ட் திரும்ப பெறப்படும் என கூறப்பட்டு உள்ளது. 

இந்த புதிய மசோதாவின்படி, இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 ல் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. அதன்படி நீதிமன்றங்கள் இந்திய வெளியுறவுத் துறையின் இணைய தளத்தின் மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சம்மன் அனுப்பலாம், சம்மனிற்கு ஆஜர் ஆகாதவர்களின் சொத்துகளையும் முடக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மேலும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாத வெளிநாடு வாழ் இந்தியரை குற்றவாளியாகவும் அறிவிக்கலாம் என இந்த மசோதாவில் குறிப்பிட்டு உள்ளனர்.  இந்த மசோதாவை வெளியுறவுத் துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ப்பு, சட்ட அமைச்சகங்கள் கூட்டு முயற்சியாக உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
இது குறித்து தகவல் அளித்த வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்த மசோதா வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமண புகார்களுக்கு தக்க பதிலாக அமையும் என்றும், இதன்மூலம் பெண்கள் தங்களின் வெளிநாடு வாழ் கணவர்களால் சந்திக்கும் இன்னல்கள் குறையும் என்றும் தெரிவித்து உள்ளது.

மூலக்கதை