மம்தாவை தொடர்ந்து மோடிக்கு எதிராக சந்திரபாபு நாயுடு டெல்லியில் உண்ணாவிரதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மம்தாவை தொடர்ந்து மோடிக்கு எதிராக சந்திரபாபு நாயுடு டெல்லியில் உண்ணாவிரதம்

* ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி ஜனாதிபதியை நாளை சந்தித்து மனு
* ராகுல்காந்தி, பரூக்அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் நேரில் ஆதரவு

புதுடெல்லி: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி டெல்லியில் இன்று சந்திரபாபு நாயுடு தமது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். நாளை, அவர் குடியரசு தலைவரை சந்தித்து மனு அளிக்க உள்ளார்.

அவரது உண்ணாவிரத போராட்டத்துக்கு மம்தா உள்பட 22 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக்அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள்  கலந்துகொண்டனர்.

எதிர்க்கட்சி முதல்வர்கள் மோடிக்கு எதிராக அடுத்தடுத்து போராட்டத்தை தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்த கோரிக்கையை நிறைவேற்றாததால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய அவர், சிறப்பு அந்தஸ்து கேட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். அவரது கட்சி எம்பிக்களும், நாடாளுமன்ற வளாகத்தில், கூட்டத்தொடர் நடக்கும் நாட்களில், விநோதமான போராட்டங்களை நடத்தி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

மேலும், மத்திய பாஜ அரசுக்கு எதிராக, பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடத்திய பேரணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில், 22 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்று, மத்திய பாஜ அரசுக்கு எதிரான வியூகங்களை வகுத்தனர். கடந்த சில தினங்களுக்கு முன், கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜிவ்குமார் விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் மம்தா நடத்திய தர்ணா பேராட்டத்தில், சந்திரபாபு நாயுடு பங்கேற்று தனது ஆதரவை தெரிவித்தார்.

இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக தனது அடுத்தகட்ட போராட்டமாக, டெல்லியில் அவர் இன்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருந்தார். அதன்படி, அங்குள்ள ஆந்திர பவனில் தமது உண்ணாவிரத போராட்டத்தை இன்று தொடங்கினார்.

மத்திய அரசின் பாரா முகத்தை கண்டிக்கும் வகையில் கறுப்பு வண்ண சட்டை அணிந்து, அவர் தமது உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

முன்னதாக மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் மரியாதை செலுத்திய சந்திரபாபு நாயுடு, ஆந்திர பவனில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்தார். ‘தர்ம போராட்ட தீக்ஷா’ என்ற பெயரில் நடைபெறும் இந்த போராட்டத்தில் மாநில அமைச்சர்கள் மற்றும் தெலுங்குதேச எம்எல்ஏ, எம்பிக்களும் பங்கேற்றுள்ளனர்.

மேலும் மாநில அரசு ஊழியர் சங்கங்கள், மாணவர் அமைப்புகளும் 2 ரயில்களில் ஆந்திராவில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பே புறப்பட்டு சென்று போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். இன்று காலை 8 மணிக்கு ஆந்திரா பவனில் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரவு 8 மணிவரை நடக்கிறது.

எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து மம்தா உள்ளிட்ட 22 கட்சிகளின் தலைவர்கள் வந்து உண்ணாவிரதத்தில் பங்கேற்பார்கள் அல்லது சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோர் நேரில் சென்று சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

உண்ணாவிரதப் போராட்டம் முடிந்தபின் நாளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, சந்திரபாபு நாயுடு மனு அளிக்க உள்ளார். முன்னதாக பிரதமர் மோடி, நேற்று ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது, “காங்கிரசால் அவமானப்படுத்தப்பட்டதால் என். டி. ராமாராவ் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கினார். காங்கிரசை ‘துஷ்டன்’ என்று வர்ணித்தார்.

ஆனால், தற்போதைய தெலுங்கு தேசம் தலைவர் (சந்திரபாபு நாயுடு) காங்கிரசுடன் கைகோர்த்துள்ளார். இதனால், என். டி. ராமாராவின் ஆன்மா வேதனைப்படும்” என்றார்.



இதற்கு பதிலளிக்கும் வகையில், விஜயவாடாவில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கறுப்பு சட்டை அணிந்தவாறு சந்திரபாபு நாயுடு பேசியதாவது: என்னை தனிப்பட்ட முறையில் மோடி விமர்சித்துள்ளார். மோடி கொண்டு வந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஒரு துக்ளக் பாணி சட்டம்.

மத்திய அரசு அளிக்கும் நிதிக்கு, ஆந்திர அரசு கணக்கு காட்டுவது இல்லை என்றும் கூறியிருக்கிறார். அதற்கென மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி இருக்கிறார்.

கணக்கை அவர் பார்த்துக்கொள்வார். நான் காங்கிரசுடன் கைகோர்த்து இருப்பதையும் மோடி விமர்சித்துள்ளார்.

அந்த காலத்தில், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை எதிர்த்து என். டி. ராமாராவ் போராடினார். இப்போது, ஆந்திரா நலனுக்காக நான் காங்கிரசுடன் கைகோர்த்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

13, 14ம் தேதியில் எதிர்க்கட்சிகள்
இன்று டெல்லியில் நடக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் உண்ணாவிரத போராட்டத்துக்கு, சுமார் 22 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தொடர்ந்து ‘சர்வாதிகாரத்தை அகற்றுவோம்; ஜனநாயகத்தை காப்போம்’ என்ற தலைப்பில் வரும் 13 மற்றும் 14ம் தேதிகளில் எதிர்க்கட்சிகளின் தரப்பில் டெல்லியில் தர்ணா நடத்தப்படுகிறது.

இதில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் உட்பட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் பங்கேற்க, மேற்குவங்கத்தில் இருந்து ஆயிரக்கணக்கான திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லிக்கு வர உள்ளனர்.

இதேபோல், எதிர்க்கட்சிகளின் தொண்டர்களும் டெல்லியை நோக்கி சென்று போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அடுத்தடுத்த நாட்களில் எதிர்க்கட்சிகள் தர்ணாவில் ஈடுபடுவதால், டெல்லி போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

முதல்வர் பேட்டி
 உண்ணாவிரத போராட்டம் குறித்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், ‘‘ஆந்திர மக்களின் சுயமரியாதையை காப்பாற்றவே இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.

ஆந்திராவின் சுயமரியாதை மீது தாக்குதல் நடத்தினால் பொறுத்துக் கொள்ள மாட்டோம். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் எப்படி நிறைவேற்றிக் கொள்வது என்பது எங்களுக்கு தெரியும்.

தனி மனிதனை தாக்கி பேசுவதை, பிரதமரும் மத்திய அரசும் நிறுத்தி கொள்ள வேண்டும்’’ என்றார்.

.

மூலக்கதை