பெண் சப்-கலெக்டரை ஒருமையில் திட்டிய எம்எல்ஏ பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெண் சப்கலெக்டரை ஒருமையில் திட்டிய எம்எல்ஏ பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மூணாறில் சப்-கலெக்டரை ஒருமையில் திட்டிய எம்எல்ஏ மன்னிப்பு கேட்டுள்ளார். மூணாறு அருகே உள்ள தேவிகுளம் சப் கலெக்டராக இருப்பவர் ரேணு ராஜ்.

ஐஏஎஸ் பெண் அதிகாரியான இவர் தேசிய அளவில் இரண்டாவதாக தேர்ச்சி பெற்றவர். பழைய மூணாறு பகுதியில் முதிரப்புழையாற்றின் கரையில் பஞ்சாயத்து சார்பில் வணிக வளாகத்துடன் கூடிய மகளிர் தொழில் மையத்திற்கான கட்டிட பணிகள் நடந்து வருகின்றன.

இது அரசு அனுமதியின்றி கட்டப்படுவதாக சப் கலெக்டர் ரேணு ராஜிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து பணிகளை நிறுத்தி வைக்க அவர் உத்தரவிட்டார்.

இருப்பினும் கட்டிட பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன.

இதையடுத்து 2 நட்களுக்கு முன் நேரடியாக சம்பவ இடம் சென்று கட்டிட பணிகளை நிறுத்தி வைக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு சப் கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்த மூணாறு தாசில்தார் உட்பட அதிகாரிகள் அங்கு விரைந்தனர்.

இது குறித்து அறிந்த தேவிகுளம் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ ராஜேந்திரன் தலைமையில் கட்சியினர் விரைந்து சென்று அதிகாரிகளை தடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது எம்எல்ஏ ராஜேந்திரன் சப் கலெக்டர் ரேணு ராஜை ஒருமையில் திட்டினார். ‘‘அவள் அறிவில்லாதவள், ெவறும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி தான்.

கலெக்டர் ஆகவேண்டும் என்பதற்காக ஐஏஎஸ் படித்த அந்த பெண்ணிற்கு நாட்டு நடப்பு எதுவும் தெரியாது. ஐஏஎஸ் படித்தால் எல்லாம் தெரியும் என்று அந்த பெண் கருதுகிறாள்.

கட்டிட சட்டம் பஞ்சாயத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும். அதில் தலையிட அவளுக்கு எந்த உரிமையும் இல்லை.

இந்த பஞ்சாயத்து கட்டும் கட்டிடத்திற்கு தடை விதித்தால் நஷ்டஈடு கோரி நான் அவள் மீது வழக்கு தொடர்வேன்’’ என்றெல்லாம் கூறினார். ஐஏஎஸ் அதிகாரியை அவள் இவள் என்று ஒருமையில் எம்எல்ஏ திட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எம்எல்ஏ ராஜேந்திரன் செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அவரிடம் விளக்கம் கேட்க மார்க்சிஸ்ட் கட்சி தீரமானித்துள்ளது.

இந்நிலையில் எம்எல்ஏ ராஜேந்திரன் கூறுகையில், எனது கருத்துகள் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

ஆனால் பஞ்சாயத்து விதிமுறைக்கு உட்பட்டுதான் கட்டிடம் கட்டப்படுகிறது என கூறினார்.

.

மூலக்கதை