சபரிமலையில் மேலும் 3 பெண்கள் தரிசனம் செய்த வீடியோ உள்ளது: கனகதுர்கா, பிந்து பரபரப்பு தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சபரிமலையில் மேலும் 3 பெண்கள் தரிசனம் செய்த வீடியோ உள்ளது: கனகதுர்கா, பிந்து பரபரப்பு தகவல்

திருவனந்தபுரம்: சபரிமலையில் தங்களை தவிர மேலும் 3 இளம் பெண்கள் தரிசனம் செய்த வீடியோ ஆதாரம் தங்களிடம் இருப்பதாக பிந்து, கனகதுர்கா ஆகியோர் நிருபர்களிடம் கூறினர். சபரிமலையில் பிந்து, கனகதுர்கா ஆகிய 2 இளம் பெண்கள் தரினம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன்பின்னர் இருவருக்கும் பல்வேறு மிரட்டல்கள் வந்தன. இதனால் ேபாலீசார் அவர்களை ரகசிய இடத்தில் தங்க வைத்தனர்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் இருவரும் வீடு திரும்பினர். பிந்து கோழிக்கோட்டில் உள்ள தனது கணவனுடன் வசித்து வருகிறார்.

ஆனால் கனகதுர்கா அவரது கணவர் வீட்டுக்கு சென்றபோது கணவர் கிருஷ்ணன்உண்ணி, மாமியார் சுமதியம்மா கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வீட்டில் அனுமதிக்க மறுத்தனர்.

இந்நிலையில் கனகதுர்கா பெருந்தல்மன்னா நீதிமன்றத்தில், தன்னை வீட்டில் அனுமதிக்க உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்றம் அவரை வீட்டில் அனுமதிக்க உத்தரவிட்டது. இதன்படி அவர் போலீஸ் பாதுகாப்புடன் கணவர் வீட்டுக்கு சென்றார்.

ஆனால் அவரது கணவர் கிருஷ்ணன்உண்ணி தனது 2 குழந்தைகள் மற்றும் தாயையும் அழைத்துக்கொண்டு வாடகை வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் கனகதுர்கா வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மலப்புரத்தில் பிந்து மற்றும் கனகதுர்கா இருவரும் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது கனகதுர்கா கூறுகையில், எனக்கு எதிராக எனது அண்ணன் பரத்பூஷன் தான் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். நான் சபரிமலை சென்றபோது கொண்டு சென்ற பேக்கில் நாப்கின் இருந்ததாக பொய்யான தகவல் பரப்பினார்.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மிரட்டல் காரணமாகவே அவர் இவ்வாறு செயல்பட்டு வருகிறார். எனது கணவரையும் எனது அண்ணன்தான் மிரட்டி வருகிறார்.

சபரிமலையில் நாங்கள் இருவர் மட்டுமல்ல மேலும் 3 இளம் பெண்கள் தரிசனம் செய்துள்ளனர். இதற்கான வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.

சபரிமலைக்கு செல்வதற்கு முன்பு வரை எங்களது குடும்பத்தில் எந்த பிரச்னையும் கிடையாது. அதன் பின்னர் பாஜவின் தூண்டுதலாலேயே குடும்பத்தில் பிரச்னை ஏற்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை