இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் முத்தையா முரளிதரன் வெளியிட்ட விடயம்!

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் முத்தையா முரளிதரன் வெளியிட்ட விடயம்!

தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் பொருளாதார ரீதியில் வளம் பெறவே ஆர்வமாகவுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
 
சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், கலந்துக்கொண்டு இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய நிலைக்குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
 
இதன்போது அவர் மேலும் கூறுகையில், “அணித்தலைவர் தினேஸ் சந்திமால், நீக்கத்தால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து கருத்து கூற எதுவுமில்லை. ஆனால் இலங்கையில் கிரிக்கெட் நிலை கவலை தருகிறது. திறமையான வீரர்கள் தொடர்ச்சியாக உருவாகாத நிலை, ஆர்வமின்மையால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களை இலங்கை இழந்து வருகிறது.
 
நான் ஓய்வு பெற்றது முதல் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில், எந்த செயல்பாடும் மேற்கொள்ளவில்லை. மூன்று முறை உலகக் கிண்ண இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை நிலைமை கவலை தருகிறது.
 
கிரிக்கெட்டின் தரம் குறைந்து வருகிறது. தற்போதைய தலைமுறையினர் பொருளாதார ரீதியில் வளம் பெறுவதில் கவனமாக உள்ளனர்.
 
எங்கள் காலத்தில் பணம் என்பது ஒரு அளவுகோலில்லை. 90ஆம் ஆண்டு கால கட்டத்தில் அதிக பணம் செலவழிக்கப்படவில்லை. ஒருவர் சிறப்பாக விளையாடினாலே பணம், அங்கீகாரம் தானாக கிடைத்து விடும்.
 
இலங்கையில் போதிய திறமை வாய்ந்த வீரர்களை உருவாக்க முடியவில்லை. பயிற்சியாளர்களால் சிறந்த வீரர்களை உருவாக்க முடியாது. அடிப்படை விளையாட்டு குறித்து அவர்கள் பயிற்சி தர முடியும். தனி நபர் ஆர்வம், முயற்சியால் தான் வெற்றி சாத்தியமாகும்” என கூறினார்.
 
மேலும் எதிர்வரும் உலகக்கிண்ண தொடரில், இந்தியா அல்லது இங்கிலாந்தே உலகக்கிண்ணத்தை வெல்லும் எனவும் அவர் கணித்துள்ளார்.

மூலக்கதை